PUBLISHED ON : மார் 24, 2024

'குளோக்கோமா' எனப்படும் கண் அழுத்த நோய்க்கு கண்களில் அழுத்தம் அதிகரிப்பது மட்டும் காரணமில்லை; வேறு உடல் கோளாறுகளாலும் குளோக்கோமா வரலாம்.
பொதுவாக கண்களில் ஏதாவது கோளாறு எற்பட்டால், வலி, நீர் வடிவது, அரிப்பு, கண்கள் சிவந்து போவது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். ஆனால், குளோக்கோமாவால் ஒரு சிலருக்கு கண் சிவக்கலாமே தவிர, பொதுவாக எந்த அறிகுறியும் தெரியாது.
நாற்பது வயதிற்கு மேல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண் டாக்டரிடம் பரிசோதனை செய்வது அவசியம். கண்களில் அழுத்தம் 20 மி.மீ., க்கு குறைவாக இருக்க வேண்டும்; அதிகமாக இருந்தாலே குளோக்கோமா உள்ளதா என்பதை பரிசோதிப்பது அவசியம். தாமதம் செய்தால், நேர் பார்வை மட்டுமல்ல; பக்கவாட்டில் மேலே, கீழே என்று எல்லா பக்கத்திலும் பார்வை திறன் குறைந்து விடும்.
கண் அழுத்தம் தவிர, கண்களின் அமைப்பில், செயல்பாட்டில் ஏற்படும் மாற்றம், ரத்த நாளங்களில் வரும் மாற்றங்கள், மரபியல் காரணிகள், சில நேரங்களில் நரம்பு செல்களில் ஏற்படும் மாற்றங்கள், குளோக்கோமா அபாயம் ஏற்படுவதில் பெரிய பங்கு வகிப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது.
மருத்துவக் கல்லுாரியோடு இணைந்த எங்கள் மையத்திற்கு, பொது மருத்துவம், அறுவை சிகிச்சை என்று வரும் நோயாளிகளுக்கு, கண்கள் உட்பட முழு உடல் பரிசோதனையும் செய்கிறோம். இவர்களில், அறிகுறிகள் இல்லாத பலருக்கும் குளோக்கோமா பாதிப்பு இருக்கிறது.
இது, வேறு உடல் கோளாறுகளின் தாக்கத்தால் ஏற்படும் இரண்டாம் நிலை பாதிப்பாக குளோக்கோமா வரலாம் என்பதை உறுதி செய்கிறது. மரபியல் காரணி இதில் முதலிடத்தில் உள்ளது.
இது தவிர, காரணம் தெரியாமல் குழந்தைகளுக்கு வரும் ஆர்த்ரைடீஸ், வலிப்பு, வைரஸ் தொற்றுகள், முதியவர்களுக்கு வரும் அல்சைமர், பார்க்கின்சன்ஸ், தைராய்டு கோளாறுகள் போன்றவை குளோக்கோமா வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றன.
தோல் நோய்கள், மைக்ரேன் தலைவலி, ஆஸ்துமா, ஆர்த்ரைடீஸ், மன அழுத்தம், மனப் பதற்றம் போன்றவற்றிற்கு நீண்ட நாட்கள் சாப்பிடும் ஸ்டிராய்டு மாத்திரைகளும் குளோக்கோமாவை ஏற்படுத்தலாம். கண் அழுத்தத்தால் வரும் குளோக்கோமா மிக மெதுவாகவே தீவிரமடையும்; உடல் பிரச்னைகளால் வரும் பாதிப்பு வெகு விரைவில் தீவிரமடையும்.
கண்களில் அடிபட்டால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு குளோக்கோமா வரும் அபாயம் உள்ளது. பார்வை குறைபாட்டில் 'பிளஸ் பவர்' உள்ளவர்களுக்கும் பாதிப்பின் அபாயம் அதிகம். கருவிழியின் அடர்த்தி குறைவாக இருப்பது, பார்வை குறைபாட்டில் 'பிளஸ' பவர் இரண்டும் குளோக்கோமா வர வாய்ப்பு உள்ளது.
ஆங்கிள் குளோஷர் குளோக்கோமா என்ற வகையில், எதிர்பாராத நேரத்தில் வலி கண்களில் ஏற்பட்டு சிவந்து விடும். வாந்தி, தாங்க முடியாத வயிற்று வலி வரும்.
கண்களில் ஏற்பட்ட அழுத்தம் என்பது புரியாமல், செரிமானப் கோளாறு என்று பொது மருத்துவரிடம் செல்வர். பிறவியிலேயே குளோக்கோமா பாதிக்கலாம். நரம்பு, கண், தோல் மூன்றும் ஒரே சமயத்தில் பாதித்தால் அது குளோக்கோமாவாக இருக்கலாம்.
டாக்டர் ராதா அண்ணாமலை,
தலைவர்,
கண் மருத்துவப் பிரிவு,
ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையம்,
சென்னை.
044 - 4592 8500

