sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரைக் கேளுங்கள்

/

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்


PUBLISHED ON : டிச 15, 2025

Google News

PUBLISHED ON : டிச 15, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முத்துலட்சுமி, மதுரை: எனக்கு முன்பகுதியில் இரண்டு பற்களுக்கு இடையே இடைவெளி உள்ளது. அதனை சரி செய்ய முடியுமா?



உடல் மற்றும் தாடையின் அமைப்பை பொறுத்து பற்களின் அளவும் வேறுபடும். பற்களில் இடைவெளி வருவதற்கான காரணத்தை சரியாக கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும். பற்களின் இடைவெளியை சரிசெய்து சீராக்கி கம்பி கட்டும் சிகிச்சை செய்யலாம். பற்களின் மேல் கம்பி கட்டுவது சங்கடமாக இருக்கும் என நினைத்தால் 'அலைனர்' சிகிச்சை மூலம் எளிதாக பற்களின் இடைவெளியை சரிசெய்யலாம். பற்களின் அளவு சிறிதாக அல்லது தேய்ந்து போய் இடைவெளி இருந்தால் அதன் மேல் 'கேப்' மாட்ட வேண்டும். ஈறுகள் பலமாக இல்லையென்றாலும் பற்கள் நகர்ந்து இடைவெளி உண்டாகும். ஈறுகளுக்கு சிகிச்சை செய்து பலமாகி விட்டால் இந்த இடைவெளி சரியாகி விடும்.

- டாக்டர் அனுஷா கண்ணபெருமான், பல் மருத்துவ சிறப்பு நிபுணர், மதுரை

எஸ்.பாலமுரளி, வடமதுரை: உண்ணிக்காய்ச்சால் என்றால் என்ன... அது வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஸ்க்ரப் டைபஸ் என்பது ஓரியன்டியா சுட்சுகாமுஷி பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோய். இது பாதிக்கப்பட்ட உண்ணிகள் (mites) கடிப்பதன் மூலம் பரவுகிறது. உண்ணிக் காய்ச்சலானது எலி, அணில், பெருச்சாளி. செல்லப் பிராணிகளான நாய், பூனை, வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, போன்ற கால்நடைகளின் உடலில் வளரும் உண்ணிகள், மண்ணில் இருக்கும் உண்ணிகள் கடிப்பதன் மூலம் பரவும்.

இந்நோய் ஏற்பட்டால் காது மடல், அக்குள் உள்ளிட்ட உடலின் மறைவான பகுதிகளில் தடிப்புகள், கொப்புளங்கள், சொரி ஏற்படும். இதை தொடர்ந்து காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு ஏற்படும். இந்த அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற வேண்டும். ஆரம்பத்திலே கண்டறிந்தால் மாத்திரைகள் மூலமாக எளிதாக குணப்படுத்த முடியும். கவனிக்காமல் தீவிரமடைந்தால் உடலின் பல உறுப்புகள் செயலிழந்து உயிரிழப்புக்கும் வாய்ப்பு ஏற்படும். பாதிக்காமல் இருக்க வீட்டினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். துவைத்த துணிகளை தினமும் அணிய வேண்டும். காடுகளில் வேலை செய்து வீடு திரும்பிய பின் சுடுநீரில் குளியல் சோப்பு பயன்படுத்தி குளிக்க வேண்டும்.

--டாக்டர் வி. ஹரிப்பிரியா, பொது நல மருத்துவர், வடமதுரை

எஸ்.கணேசன், ஆண்டிபட்டி: எனக்கு 45 வயது ஆகிறது. சில மாதத்திற்கு முன் கால் பாதங்களில் சிறு சிறு வெடிப்பு (பித்த வெடிப்பு) ஏற்பட்டது. தற்போது பனிக்காலத்தில் வெடிப்புகள் அதிகமானதால் வலி ஏற்படுகிறது. பித்த வெடிப்புகள் எதனால் ஏற்படுகிறது. இதனை தடுப்பது எப்படி, சிகிச்சைக்கு என்ன செய்யலாம்?

உடலில் சூடு அதிகமாவதால் கால் பாதங்களில் பித்த வெடிப்புகள் ஏற்படுகிறது. வெயில், பனி, காற்று அதிகமாகும் போது உடலில் தோல் வறட்சி அதிகமாகும். சிலருக்கு இயற்கையிலேயே உடல் சூடாக இருக்கும். இதனால் கால் பாதங்களில் பித்த வெடிப்புகள் தோன்றும். தோல் வறட்சியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் இந்த பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது. நீர்ச்சத்துள்ள காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், மோர், நெய், ஜூஸ் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடல் சூடு குறையும். தோலில் வறட்சி மாறும். பாதம் மற்றும் வெடிப்பு உள்ள இடங்களில் அமிர்த வெண்ணை அல்லது சாதாரண வெண்ணை தடவலாம் இதனால் பாதிப்பு குறையும்.

- பி.சங்கர்ராஜ், சித்த மருத்துவர், ஒருங்கிணைந்த ஆயுஸ் மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி

எஸ்.ஜெனிபர், ராமநாதபுரம்: எனக்கு மார்பகங்களில் கட்டிகள் காணப்படுகின்றன. மார்பக புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. அதனை எவ்வாறு உறுதி செய்து கொள்ளவது?

பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் சதவீதம் அதிகரித்து வருகிறது. உடல் பருமன், நீர்க்கட்டி, தைராய்டு, பரம்பரை வழியாக மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனை ஆரம்ப நிலையில் கண்டறியும் பட்சத்தில் எளிதாக குணப்படுத்த முடியும். ஆனால் ஆரம்ப நிலையில் மார்பக புற்று நோய் இருப்பது தெரியாது.

முற்றிய நிலையில் தான் உடலில் அதன் தாக்கம் தெரிய வரும். ஆரம்ப நிலையில் மார்பகங்களில் கட்டிகள் போன்று வரும். பெண்கள் சுய பரிசோதனை செய்து கட்டிகள் இருப்பது தெரிய வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சிலர் தயக்கப்பட்டு வெளியே சொல்லாமல் இருக்கின்றனர்.

தாமதிப்பதால் நோய் பாதிப்பு அதிகரிக்கும். 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனைவரும் மார்பக பரிசோதனை செய்வது கட்டாயம். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனையில் மேமோகிராம் பரிசோதனை மூலம் பரிசோதனை செய்து மார்பக புற்றுநோய் உள்ளதை உறுதி செய்து கொள்ளலாம்.

- டாக்டர் வசந்தி ராஜமோகன், மகப்பேறு மருத்துவ நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்

அ.காவியா,சிவகங்கை: குழந்தை பிறந்த பின் ஏற்படும் மனச்சோர்வு கவலைக்குரியதா?

குழந்தை பிறப்பிற்கு பின் பல தாய்மார்களுக்கு ஏற்படும் லேசான மனச்சோர்வு, அழுகை, எரிச்சல், துாக்கமின்மை போன்றவை தானாக சீராகி விடும். ஆனால் ஒருவருக்கு மன அழுத்தத்தின் காரணமாக ஆழ்ந்த சோகம், பதட்டம், ஆர்வக் குறைவு, குழந்தை பராமரிப்பில் சிரமம், குற்ற உணர்வு, நம்பிக்கை இழப்பு, துாக்கமின்மை, தற்கொலை எண்ணங்கள் போன்றவை நீடித்தால் மனநல மருத்துவரை அணுகவேண்டும். அதேபோல் குழப்பம், பயம், சந்தேகம், தன்னை அல்லது குழந்தைக்கு தீங்கு செய்யும் எண்ணங்கள் இருந்தாலும் உடனடியாக மனநல மருத்துவரை அணுகவேண்டும். அவரிடம் சரியான ஆலோசனை பெறவேண்டும். குடும்ப ஆதரவு, தேவையான சிகிச்சை அளித்தால் அவர்களை குணப்படுத்தலாம்.

- டாக்டர் திவ்யப்ரியா, மருத்துவ அலுவலர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிரான்மலை

மகேஸ்வரி, அருப்புக்கோட்டை: எனக்கு வயது 24. திருமணமாகிவிட்டது. நான் தற்போது கர்ப்பமாக உள்ளேன். 3 ஆண்டுகளாக எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. சிகிச்சை எடுத்து வருகிறேன். எனக்கு பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா, வேறு ஏதாவது சிறப்பு சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டுமா?

கர்ப்பமான நிலையில் சர்க்கரை நோய் இருந்தால் அவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். எச்.பி.ஏ. 1.சி., டெஸ்ட் ரிப்போர்ட் பார்க்க வேண்டும். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சர்க்கரை நோய் இருந்தால், அது குழந்தையை பாதிக்க செய்யும். சர்க்கரை நோயால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம். குறைந்த ரத்த சர்க்கரைக்கான அறிகுறிகளை கர்ப்ப காலத்தில் கண்டறிவது கடினம். கர்ப்பமாக இருக்கும்போது சர்க்கரை அளவை சரியாக வைத்துக் கொண்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சர்க்கரை அளவு 6 புள்ளிக்கு கீழ் இருந்தால் தொந்தரவு வராது. சுகாதாரமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவுப் பழக்கங்கள் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

- டாக்டர் கோமதி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அருப்புக்கோட்டை






      Dinamalar
      Follow us