/வாராவாரம்/நலம்/பல் கோளாறுகள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்குமா?

பல் கோளாறுகள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்குமா?

பல் கோளாறுகள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்குமா?

பல் கோளாறுகள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்குமா?

பல் கோளாறுகள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்குமா?

PUBLISHED ON : ஏப் 12, 2026


Google News
Latest Tamil News
பல பெற்றோர் குழந் தைகளின் பல் வலியை ஒரு சிறிய பிரச் னையாகவே கருதுகின்றனர். 'பால் பல்லுதானே, பின் விழுந்துவிடும்' என்ற தவறான எண்ணம், இதற்கு காரணமாக உள்ளது.

உண்மையில், குழந்தைகளின் பல் வலி மற்றும் பல் பிரச்னைகள் அவர்களின் உணவு பழக்கம், உடல் வளர்ச்சி, மனநலம், படிப்பு திறன் மற்றும் எதிர்கால பல் அமைப்பு வரை மறைமுகமாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

எப்படி

பல் வலி உள்ள குழந்தைகள், தினசரி சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து மிக்க, அதே சமயம் பற்களால் கடித்து, மென்று சாப்பிட வேண்டிய, கடினமான உணவுகளான, காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் போன்றவற்றை மென்று சாப்பிட முடியாமல் முழுமையாகத் தவிர்க்கின்றனர்.

சமயங்களில், வலி, அசவுகரியம் காரணமாக, இது போன்ற உணவு உண்ணும் அளவு குறைகிறது. மாறாக, மென்மையான, சர்க்கரை அதிகம் உள்ள தவிர்க்க வேண்டிய, உணவுகளையே குழந்தைகள் விரும்புகின்றனர். இது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட காரணமாகிறது.



உடல் வளர்ச்சி


சரியான ஊட்டச்சத்து கிடைக்காததால் குழந்தைகளின் எடை, உயரம் வயதிற்கு ஏற்றவாறு இருப்பதில்லை. கால்சியம், புரதம், இரும்புச்சத்து போன்ற முக்கிய ஊட்டச் சத்துக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படலாம். தொடர்ச்சியான வலி குழந்தைகளின் உடல் நலத்தை மட்டுமல்லாமல், மன வளர்ச்சியை பாதிக்கிறது.

படிப்பு திறன்

பல் வலி காரணமாக குழந்தைகள் சரியாக துாங்க முடியாமல் போகும். இதனால், நினைவாற்றல், கவனம் செலுத்தும் திறன் குறைகிறது. பள்ளியில் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமல், படிப்பில் பின்னடைவு ஏற்படுகிறது.

வலி காரணமாக, எரிச்சல், மன அழுத்தம், பயம் உருவாகலாம். சில குழந்தைகள், பல் வலி காரணமாக, பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் தவிர்க்கவும் துவங்குகின்றனர்.

ஆலோசனை

குழந்தைகளின் பல் வரிசை, உணவுப் பொருளை கடிப்பது, தாடை வளர்ச்சி குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சரியான மருத்துவ வழிகாட்டல் பெற்றால், எதிர்காலத்தில், புதிய பல் கட்டும் அவசியம், தாடை எலும்பு சிகிச்சையை தவிர்க்க உதவும். ஆரம்ப வயதில் அளிக்கும் சரியான கவனம், இயல்பான பல் வளர்ச்சிக்கு உதவும்.

பெற்றோர் கவனிக்க வேண்டியவை:

* குழந்தை உணவு சாப்பிட மறுப்பது

* ஒரு பக்கமாக மட்டும் மென்று சாப்பிடுவது

* இரவில் துாக்கத்தில் அழுவது

* வாயில் துர்நாற்றம்

* பற்களில் கருப்பு - வெள்ளை புள்ளிகள் தோன்றுதல்

* தினசரி பல் பராமரிப்பு

குழந்தைகள் உணவு சாப்பிட்ட பின், பானம் குடித்த பின், வாயை நன்றாக கொப்ப ளிப்பது அவசியம். குறிப் பாக, பால் குடித்தால், வாயை கொப்பளித்து, பல் துலக்கியப் பின் துாங்க வேண்டும். பால் குடித்த வாயுடன் துாங்கினால், உணவில் உள்ள சர்க்கரை பற்களில் படிந்து, 'பிளாக்' எனப்படும் பாக்டீரியாத் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குழந்தைகளுக்கு பல் பரிசோதனை செய்வது, தினமும் இரண்டு முறை பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது, பால் பற்களையும் முக்கியமானதாக கருதி உடனடி சிகிச்சை பெறுதல், பல் வலி ஏற்பட்டவுடன் தாமதிக்காமல் பல் மருத்துவரை அணுகுவது அவசியம்.

குழந்தைகளின் பல் வலி ஒரு சிறிய பிரச்னை அல்ல. அது அவர்களின் உணவு, உடல் வளர்ச்சி, மனநலம், படிப்பு திறன் மற்றும் எதிர்கால பல் அமைப்பு ஆகிய அனைத்தையும் மறைமுகமாக பாதிக்கும்.

டாக்டர் எஸ்.வேதநாயகி, பல் மருத்துவர், மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சென்னை. 99956 15677vedhanayakisenthils@gmail.com