
என்னோட பணி ஓய்வுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள்; ஆனா, 'இன்னும் இரண்டே ஆண்டுகள்தான்'னு யோசிக்கிறேன். 1989ம் ஆண்டு ஆசிரியையா சேர்ந்தப்போ இருந்த உத்வேகத்தோட வேலை பார்க்குறேன். நான்... அணிலா காமராஜ். சென்னை, சவுகார்பேட்டை 'கே.டி. சி.டி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியோட தலைமை ஆசிரியை!
குருவாகிய அம்மா
இந்த பள்ளியோட முன்னாள் தலைமை ஆசிரியை ரமாதேவி... என் அம்மா! அவங்க தலைமையில நான் வேலை பார்க்குற வாய்ப்பு கிடைச்சாலும், எந்த சிறப்பு சலுகையையும் அவங்க எனக்கு தந்ததில்லை. அவங்க உருவாக்கின அந்த சூழல்தான் இன்னைக்கு என் பொறுப்புணர்ந்து நான் செயல்பட காரணம்னு நம்புறேன்!
நட்பென்றால்...
'பள்ளிக்கூட வாழ்க்கையை புடம் போட்டு அனுப்புறது நட்புதான்'னு நான் ஆணித்தரமா சொல்லுவேன். 'தோழனை, தோழியை காட்டிக் கொடுத்துடக் கூடாது'ன்னு வகுப்பறையில நாம பழகுறதுதான், 'துரோகம் செய்யாம வாழ்வது எப்படி'ன்னு வாழ்க்கை நமக்கு கத்துக்கொடுக்குற முதல் பாடம். அப்படியான நட்பு இப்போ இல்லை!
திருத்தி எழுதுங்கள்
'ஆட்டோ ஓட்டுனரோட பொண்ணு ஒரு ஓட்டுனருக்குத்தான் மனைவி ஆகணும்னு இல்லை. நீங்க நல்லா படிச்சா மிகச்சிறந்த வாழ்க்கை அமையும். கல்வியால உங்க குடும்பத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு போக முடியும். புகுந்த வீட்டுக்கு நீங்க கொண்டு போகப்போற மிகச்சிறந்த சீதனம்... கல்வி!' - இது, என் மாணவியருக்கு என் அறிவுரை!
பெருமக்களே...
நம்மால செய்ய முடியுமோ இல்லையோ, 'முயற்சிக்கிறேன்'னு ஆசிரியர்கள் சொல்லிப் பழகணும். இன்னைக்கு பல ஆசிரியர்கள் 'இதை செய்ய முடியாது'ன்னு முகத்துக்கு நேரா சொல்லிடுறாங்க. செய்ய இயலாத ஒரு பணியை மறுக்குறது தப்பில்லைன்னாலும் கொஞ்சமும் முயற்சிக்காம அதை மறுக்குறது... 'தன்னம்பிக்கை கொலை'ங்கிறது என் எண்ணம்.
ஒரு வேண்டுகோள்
'ஜெயிலுக்கு போயிட்டு வந்தாதான் கெத்து'ன்னு எங்கேயோ சிலர் பேசுறதை இளைஞர்கள் கைதட்டி ரசிக்கிறது அச்சம் தருது! மாணவர் சமுதாயம் போதைப் பழக்கத்தால சீரழியுறதை செய்திகள் மூலமா தெரிஞ்சுக்குறப்போ நடுங்குறேன். போதைப்பொருட்களுக்கு எதிரா அரசு இன்னும் தீவிரமா இயங்கணும்... இது என் வேண்டுகோள்!
விதையின் கதை
மிச்சம் இருக்குற இரண்டு ஆண்டுகள்ல சில விதைகளை மாணவ சமுதாயம் மனசுல விதைச்சுட்டுப் போகணும்னு ஆசைப்படுறேன். 'எந்த ஒரு வெற்றியையும் அனுபவிங்க... கொண்டாடாதீங்க; ஏன்னா, அது உங்களை ஜெயிக்க வைச்சு தோற்றவனுக்கு நீங்க செய்ற அவமரியாதை!' - இது, நான் விதைக்க விரும்புற ஒரு விதை.