சுவருக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் சிமென்ட் பலகைகள்!
சுவருக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் சிமென்ட் பலகைகள்!
ADDED : மே 10, 2026 11:39 AM

பொதுவாக வீடு, அலுவலகம், வணிக பயன்பாட்டுக்காக கட்டடங்கள் கட்டும் போது பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டும். குறிப்பாக, கட்டடத்தின் வெளிப்புற சுவர்கள் மாறாத வகையில் நிலையானதாக, உறுதியுடன் கட்டப்படும் என்பது தெரியும்.
ஆனால், கட்டடத்தின் உட்புற பகுதிகளில் அறைகள் பிரிப்பதற்கான சுவர்களும் பெரும்பாலும் நிலையானதாக கட்டப்படுகின்றன. பயன்பாட்டு நிலையில் தேவைக்கு ஏற்ப அறைகளின் அளவுகளை எப்போதும் மாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.
உதாரணமாக, ஒரு வீட்டில் வரவேற்பு அறை பெரியதாக கட்டப்பட்டு இருக்கும், அதில் ஒரு பகுதியை சிறிய அறையாக மாற்ற வேண்டும் என்று நினைத்தால், அதற்காக புதிதாக கட்டுவது என்று பணியில் இறங்கினால், அது பல்வேறு வகை தாக்கத்தை ஏற்படுத்தும்.
வீடு, கடைகள், அலுவலகங்களில் அறை பிரிப்பு என்று வரும் போது, பலகைகள் குறிப்பாக பிளைவுட் அல்லது ஜிப்சம் பலகைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அறை பிரிப்புக்காக பயன்படுத்தப்படும் பலகைகள் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இது போன்ற பலகைகளை பயன்படுத்தும் போது, ஒரு அறையில் பேசும் சத்தம் அடுத்த பகுதிக்கு கேட்கக் கூடாது என்று மக்கள் நினைக்கின்றனர். இது மட்டுமல்லாது, ஈரம், தீ போன்ற பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
இதில் பிளைவுட், ஜிப்சம் பலகைகளுக்கு மாற்றாக, சிமென்ட், மரம் சேர்த்து தயாரிக்கப்பட்ட பலகைகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பலகைகள் எளிதில் உடையாத அளவுக்கு சிறப்பான உறுதி தன்மையுடன் தயாரிக்கப்படுகின்றன.
எவ்வளவு தண்ணீர் கொட்டினாலும் ஈரம் ஆகாது, எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. குறிப்பாக தீ பிடிக்காத தன்மையுடன் இந்த பலகைகள் தயாரிக்கப்படுவதால், பயன்பாட்டு நிலையில் பாதுகாப்பு தன்மை அதிகமாக உள்ளது.
அறை பிரிப்பு சுவர்களுக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம் என்பது மட்டுமல்லாது, அலமாரிகள், மாடுலர் கிச்சன் போன்ற வேலைகளுக்கும் இவ்வகை பலகைகளை பயன்படுத்தலாம். இந்த பலகைகள், 6 முதல், 20 மி.மீ., தடிமன்களில் தயாரிக்கப்படுகின்றன.
வீட்டில் எந்த இடத்திலும் இதை பயன்படுத்தலாம் என்பது மட்டுமல்லாது, சுவர் அமைப்பதற்கான செலவு குறையும். குறிப்பாக வீட்டின் உள் அலங்காரம் என்ற அடிப்படையில் தேவையான வண்ணங்களில் இந்த பலகைகள் கிடைக்கின்றன என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
பிளைவுட், ஜிப்சம் பலகைகளுக்கு மாற்றாக, சிமென்ட், மரம் சேர்த்து தயாரிக்கப்பட்ட பலகைகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன, இந்த பலகைகள் எளிதில் உடையாத அளவுக்கு சிறப்பான உறுதி தன்மையுடன் தயாரிக்கப்படுகிறது.
