/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
பால்கனி அமைக்கும் போது வடிகால் வசதியில் கவனம் தேவை!
/
பால்கனி அமைக்கும் போது வடிகால் வசதியில் கவனம் தேவை!
பால்கனி அமைக்கும் போது வடிகால் வசதியில் கவனம் தேவை!
பால்கனி அமைக்கும் போது வடிகால் வசதியில் கவனம் தேவை!
ADDED : மார் 14, 2026 06:53 AM

தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகள் வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், புதிதாக குடியேறும் மக்களின் எண்ணிக்கை பலமடைங்காக அதிகரித்துள்ளது. இவ்வாறு புதிதாக வருவோருக்கு உறைவிட வசதியை அளிக்க வேண்டியது அவசியமானதாக உள்ளது.
இதில் அனைவருக்கும் அரசு துறைகளே வீடு கட்டி கொடுக்க முடியாது என்பதால் மக்கள் தங்கள் நிதி நிலைக்கு ஏற்ப வீடுகளை வாங்கிக்கொள்கின்றனர். இதில் மக்களின் எண்ணிக்கை, நிலப்பரப்பளவு இடையிலான வேறுபாடு அதிகமாக உள்ளது.
இதனால், சென்னை போன்ற நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அவசிய தேவையாக மாறி வருகின்றன. குறிப்பாக, 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு கிரவுண்ட் நிலத்தில், ஆறு முதல் எட்டு குடும்பங்களுக்கான வீடுகள் கட்டப்பட்ட நிலை தற்போது மாறிவிட்டது.
இன்றைய சூழலில், ஒரு கிரவுண்ட் நிலத்தில், 10 முதல் 15 குடும்பங்களுக்கான வீடுகளை கட்டி கொடுக்க வேணடிய அளவுக்கு நெருக்கடி எழுந்துள்ளது. இதை கருத்தில் வைத்து அரசு துறைகளும் விதிகளில் தேவையான மாற்றங்களை செய்து வருகின்றன.
இந்த வகையில் அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோரின் மிக முக்கிய எதிர்பார்ப்பாக பால்கனி அமைந்துள்ளது. பால்கனி இல்லாத வீடு என்றால் அதை வாங்குவதையே மக்கள் தவிர்க்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
அதே நேரத்தில் நீங்கள் வாங்கும் வீட்டில் பால்கனி உள்ளதா என்று மட்டும் பார்த்தால் போதாது. அது எங்கு, எப்படி அமைந்துள்ளது என்பது போன்ற பல்வேறு விஷயங்களை தெளிவாக பார்த்து உரிய சமயத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
பெரும்பாலான வீடுகளில் வரவேற்பு அறை அல்லது படுக்கை அறையை ஒட்டிய நிலையில் தான் பால்கனி அமைந்து இருக்கும். பால்கனிக்கும் சம்பந்தப்பட்ட அறைக்கும் இடையில் முறையான தடுப்பு அல்லது கதவுகள் அமைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
குறிப்பாக, பால்கனி ஒரு பக்கம் திறந்தவெளியாக அமைந்து இருப்பதால் மழையின் போது தண்ணீர் அதில் நேரடியாக இறங்க வாய்ப்புள்ளது. இதில் பால்கனியின் தரைப்பகுதியில் தண்ணீர் வடிவதற்கான வடிகால் வசதி முறையாக செய்யப்பட வேண்டும்.
அதிலும், பால்கனி பகுதியில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான குழாய் திறந்த நிலையில் அமைக்கப்படுவதை பரவலாக பார்க்க முடிகிறது. இப்படி திறந்த நிலையில் குழாய் அமைப்பதால், அதில் வெளியேறும் தண்ணீர் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே, பால்கனியில் இருந்து வடியும் நீர் மூடிய குழாய் வாயிலாக நிலத்துக்கு செல்ல உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம். மழைக்காலத்தில் பால்கனியில் தண்ணீர் கொட்டும் என்பதால், அதன் தொடர்ச்சியாக உள்ள அறைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
பால்கனி ஒரு பக்கம் திறந்தவெளியாக அமைந்து இருப்பதால் மழையின் போது தண்ணீர் அதில் நேரடியாக இறங்க வாய்ப்புள்ளது, எனவே, அதன் தரைப்பகுதியில் தண்ணீர் வடிவதற்கான வடிகால் வசதி முறையாக செய்யப்பட வேண்டும்.

