/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
கோடிகளில் வீடு கட்டும் ஆபீசர்! கடைக்கோடி வரை அள்றாரு வசூலு!
/
கோடிகளில் வீடு கட்டும் ஆபீசர்! கடைக்கோடி வரை அள்றாரு வசூலு!
கோடிகளில் வீடு கட்டும் ஆபீசர்! கடைக்கோடி வரை அள்றாரு வசூலு!
கோடிகளில் வீடு கட்டும் ஆபீசர்! கடைக்கோடி வரை அள்றாரு வசூலு!
UPDATED : மே 14, 2024 05:17 AM
ADDED : மே 14, 2024 01:23 AM

மித்ரா வீட்டுக்கு வந்த சித்ரா, ''என்ன தான் மழை அடிச்சாலும், வெயிலோட உருக்கம் குறையல பார்த்தியா...'' என, கோடை வெயில் குறித்த பேசியபடி சோபாவில் அமர்ந்தாள் சித்ரா.
''ஆமான்டி மித்து, என்ன பண்றது; சமாளிச்சுத்தான் ஆகணும்'' என்றபடியே, லெமன் ஜூஸ் எடுத்து வந்து டீபாய் மீது வைத்தாள் மித்ரா.
''என்னக்கா... நம்ம டிஸ்ட்ரிக்ட், பிளஸ் 2வில் முதலிடம் வாங்கினாங்க. ஆனா, 10ம் வகுப்பில கோட்டை விட்டுட்டாங்களே...'' என, ஆதங்கப் பட்டாள் மித்ரா.
கல்வித்துறை 'கலகல'
''மித்து. இது, கல்வித்துறை அதிகாரிகளுக்கும் பெரிய 'ஷாக்'. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்த வரை இடைநிலையை கவனிக்கிற ஒரு ஆபீசர் மேல தான், டீச்சர்ஸ் புகார் வாசிக்கிறாங்களாம். எச்.எம்., மீட்டிங்ல இருந்து, பைல்கள்ல கையெழுத்துப் போடறது வரை, எந்த வேலையிலயும் அவர் சுறுசுறுப்பா இல்லையாம்,''
''அவரால, பல வேலைங்க, மாசக்கணக்குல முடங்கிடுச்சாம். ஒரு ஸ்கூலுக்கு 'விசிட்' போனாருன்னா, நாள் முழுக்க அங்கயே உட்கார்ந்து 'டைம் வேஸ்ட்' பண்றாராம். கல்வித்துறை ஆபீசில் இருந்து போன் பண்ணாக்கூட எடுக்கமாட்டாராம். அவரோட செயல்பாடும், தேர்ச்சி விகிதம் சரிய ஒரு காரணம்ன்னு பேசிக்கிறாங்க. இதனை கலெக்டர் காதுக்கும் கொண்டு போய்ட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
அப்போது மித்ராவின் போன் சிணுங்கியது. அட்டெண்ட் செய்தவுடன், ''பக்தவச்சலம் இருக்காரா...?'' என்று யாரோ கேட்க, ''சாரி, ராங் நம்பர்...'' என்ற இணைப்பை துண்டித்தாவறே, ''கல்வித்துறை மட்டுமல்ல; விளையாட்டுத்துறைலயும் சர்ச்சைக்கு பஞ்சமில்லை,'' என்ற மித்ரா தொடர்ந்தாள்.
''மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடம் காலியாத்தான் இருக்கு. கோவையை கவனிக்கிற ஆபீசர் தான், திருப்பூரையும் பார்த்துக்கிறாரு. அவரு எப்போ, ஆபீசுக்கு வராரு, போறாருன்னு, எதுவுமே தெரியறது இல்லையாம். இதனால, கோடை கால பயற்சி முகாம், விளையாட்டு விடுதிகள்ல மாணவர் சேர்க்கை விவ காரம்ன்னு எல்லாத்தையும், வெளியே தெரியாமலயே முடிச்சுடறாங்களாம்,'' என விளையாட்டுத்துறை வில்லங்கத்தை சொன்னாள் சித்ரா.
'இல்லீகல்' தாராளம்!
'பசங்க நிறைய பேரு, போதை பழக்கத்துக்கு அடிமையானதால தான் படிப்புல கோட்டை விட்டு ட்டாங்கன்னு பேசிக்கிறாங்க,'' என்ற மித்ரா, ''பல்லடத்துல நிறைய இல்லீகல் சமாச்சாரம் நடக்குதாம்; அங்க இருக்கற பஸ் ஸ்டாண்டுக்கு வர்ற பயணிகளுக்கு, பாதுகாப்பே இல்லையாம். கஞ்சா சப்ளை, வழிப்பறின்னு, சில ஆட்டோக்காரங்களே இல்லீகல் வேல செய்றாங்கன்னு, ஆட்டோ சங்கத்துல இருக்கறவங்களே புகார் கொடுக்கிற அளவுக்கு நிலைமை மாறிடுச்சாம். இருந்தாலும், போலீஸ்காரங்க 'வழக்கம் போல' மவுனமாவே இருக்காங் களாம்,'' என்றாள் சித்ரா.
''இல்லீகல்ன்னு சொல்லவும் தான், எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுங்க அக்கா. அவிநாசிக்கு பக்கத்துல, பழங்கரை பஞ்சாயத்துல, ஏகப்பட்ட 'இல்லீகல்' வாட்டர் கனெக்ஷன் குடுத்திருக்கிறதா ஒரு பேச்சு உலா வருது. இதனால தான், தண்ணிக்கு தட்டுப்பாடு வருன்னு பேசிக்கிறாங்க. ஓட்டுக்காக, இஷ்டத்துக்கு 'கனெக்ஷன்' கொடுத்துட்டு, இப்போ என்ன பண்றதுன்னு தெரியாம கவுன்சிலர்களும், ஆபீசர்களும் திருதிருன்னு முழிக்கிறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''அதேபோல, புதுப் பாளையம் பஞ்சாயத்துல, ஒரு பேக்கரி சந்துல புதுசா ஒரு வணிக வளாகம் கட்டியிருக்காங்களாம். இதுக்கு அணுகு பாதை போட, ஊராட்சி நிலத்தை ஆக்கிரமிச்சு, ஒரு பாலமே கட்டியிருக்காங்களாம். இதுக்கெல்லாம் யாரு அனுமதி கொடுத்தாங்கன்னு, மக்கள் புலம்பறாங்க,'' என்றாள் சித்ரா.
''அக்கா, ரெண்டு நாள் முன்னாடி, புதுப்பாளையம் போயிட்டு வர்றப்ப வஞ்சி பாளையம் ரோட்டோரம் இருக்கற ஒரு 'டாஸ்மாக்' கடை முன்னாடி, ஒரு நம்பர் லாட்டரி, மூனு நம்பர் லாட்டரி சூதாட்டம் அமோகமா நடந்துட்டு இருந்துச்சு. நமக்கேன் வம்புன்னு நான் கிளம்பிட்டேன். எவ்வளவு தைரியமா ரோட்டு மேலயே சூதாடறாங்க. மக்கள் கண்லயே இது படறப்போ, பூண்டி போலீஸ் கண்ணுக்கு மட்டும் எப்படி படாம போச்சுன்னு தெரியல,'' என்றாள் மித்ரா.
இப்படியுமா?
''எல்லாம் 'மாமூல்' வாழ்க்கை தான் காரணம்,'' என, சலித்துக் கொண்ட சித்ரா, ''கோடிகள்ல வீடு கட்ற ஒரு ஆபீசர், வசூலை வாரி குவிக்கிறாராம்...'' புதிர் பேட்டாள் சித்ரா.
''அக்கா யாருங்க அந்த 'நேர்மையான(?)' ஆபீசர்,'' மித்ரா கேட்டாள்.
''கூட்டுறவு துறைல இருக்கற ஒரு பெரிய ஆபீசர், தன்னோட சொந்த ஊர்ல, ரெண்டு கோடிக்கு பங்களா கட்றாராம். இதுக்காக, தன்னோட டிபார்ட்மென்ட்ல வேல செய்ற ஆபீசர்ல ஆரம்பிச்சு, பியூன் வரைக்கும், ரெண்டாயிரத்தில் இருந்து, அஞ் சாயிரம் வரை 'நன்கொடை' திரட்டியிருக்காருன்னு பேசிக்கிறாங்க; இதுவே, சில லட்சங்கள் தேறிடுச்சாம்,'' என்றாள் சித்ரா.
அப்போது, தடைபட்டிருந்த மின்சாரம் வந்ததும், டிவி திரையில், 'சீனிவாசா... கோவிந்தா' என, திருப்பதி கோவில் பாடல் ஒளிபரப்பானது.
அதனை பார்த்து கொண்டே, ''ம்ம்ம்...என்னத்த சொல்ல'' என, அங்கலாய்த்த மித்ரா, ''தாராபுரம் ஆர்.டி.ஓ., ஆபீசில் பெரிய ஆபீசருக்கு, ஜீப் ஓட்ற, ஊழியர் ஒருவர், அதிகாரி பேர சொல்லியே நல்லா கல்லா கட்டுறாராம். மத்த ஸ்டாப்ஸ் பயப்படற அளவுக்கு, அதிகார மையமா மாறிட்டாராம். இந்த விஷயம், ஆபீசர்க்கு தெரியுமான்னு தான் தெரியல. இதபத்தி, 'நுாறுக்கு' போன் பண்ணியும் பிரயோஜனமில்லையாம்'' என்றாள்.
'இதெல்லாம் ஒரு...!'
''பல்லடம் ரோட்ல, ஒரு 'ஸ்பா' இருக்காம். அங்க போன, 'டுபாக்கூர்' நிருபர்கள் ரெண்டு பேரு, 'இல்லீகல் விஷயம் நடக்கிறதா கேள்விப்பட்டோம்' ன்னு பணம் கேட்டு மிரட்டியிருக்காங்க,''
''அதுக்கு, 'ஸ்பா'வோட ஓனர், நாங்க சரியாத்தான் நடத்திட்டு இருக்கோம்ன்னு சொல்ல, வாக்குவாதம் முற்றியதில், ரெண்டு பேரும், அங்க வேலை செய்ற லேடியை அடிச்சிட்டாங்க. இதுசம்மந்தமா, ஸ்பா ஓனர், சவுத் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க, சி.எஸ்.ஆர்., மட்டும் போட்டு, 'ஆப்' பண்ணிட்டாங்களாம்,''
''ஏற்கனவே, பல்லடத்தில இப்படித்தான் ஆரம்பிச்சு, பெரிய பிரச்னையாகி நிக்குது,'' என்ற மித்ரா, ''போயம்பாளையத்துல ஒரு தற்கொலை நடந்திருக்கு. அங்கிருந்து சடலத்தை ஜி.எச்.,க்கு ஒரு ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டு போக, ஆறாயிரம் ரூபாய் வாங்குனாங்களாம்,'' என்றாள்.
''அட நீவேற, உள்ளூர்க்காரங்களா இருக்கிறதால அவ்வளவு வாங்கியிருப்பாங்க. இதுவே, வெளியூர்க்காரங்களா இருந்தா, 10 - 15 ஆயிரம் வாங்கிருப்பாங்க. இதையெல்லாம் ெஹல்த் டிபார்ட்மென்ட் ஆபீசர்ஸ் தான் கட்டுப் படுத்தணும்,'' என ஆதங்கப் பட்டாள் சித்ரா.
அரசியல் அலப்பறை
''எப்படியோ...நம்ம ஊர்லேயும் மழை பெய்ய துவங்கிடுச்சு'' என பேச்சை மாற்றிய மித்ரா, ''சின்னாண்டிபாளையம் பிரிவுல இருந்து, குளத்துக்கடை வரை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் செல்ல, பாதாள சாக்கடை கட்டினாங்க. 'டிரையல்' பார்த்தப்போ, தண்ணி சரியா போகலையாம்; இதனால குழாய்களை திரும்பவும் தோண்டி, ஒரு மீட்டர் கூடுதல் ஆழத்துக்கு பதிக்கிறாங்களாம். சரியான 'பிளானிங்' இல்லாததால தான் இப்படி நடக்குதுன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
''எப்படியெல்லம் கமிஷன் பார்க்கணுமோ, அப்படியெல்லாம் பார்க்கறாங்க,'' என, 'உச்' கொட்டிய மித்ரா, அரசியல் மேட்டருக்கு தாவினாள்.
''சமீபத்துல, காங்கிரஸ் கட்சியை கண்டிச்சு, பிஜேபி.,க்காரங்க குமரன் சிலை பக்கத்துல ஆர்ப்பாட்டம் பண்ணாங்க. ஆனா, போலீஸ்காரங்க அனுமதி கொடுக்கலையாம். இதனால, பி.ஜே.பி,க்காரங்க கடுப்பாகி, 'அனுமதியில்லாம ஆர்ப்பாட்டம் பண்ணா, 'அரெஸ்ட்' பண்ணுங்க; அத விட்டுட்டு ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாதுன்னு சொல்றதுக்கு உங்களுக்கு உரிமை இல்லைன்னு, வாக்குவாதம் செஞ்சிருக்காங்க,''
''இது ஒரு பக்கமிருக்க, அங்க ஆளுங்கட்சிக்காரங்க தவிர வேற எந்த கட்சிக்காரங்க ஆர்ப்பாட்டம் பண்ணாலும், குமரன் நினைவகத்தை போலீஸ்காரங்க பூட்டி வைச்சிடறாங்களாம். இது எந்த வகைல நியாயம்ன்னு தெரியலைன்னு பேசிக்கிறாங்க'' என்றாள் மித்ரா.
''சரி மித்து, கிளம்பறேன்; மழை வர்ற மாதிரி இருக்கு'' என்ற சித்ரா, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.

