/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
கலங்கும் பெரும் புள்ளிகள்; கலங்காத மினிஸ்டர் பி.ஏ.,
/
கலங்கும் பெரும் புள்ளிகள்; கலங்காத மினிஸ்டர் பி.ஏ.,
கலங்கும் பெரும் புள்ளிகள்; கலங்காத மினிஸ்டர் பி.ஏ.,
கலங்கும் பெரும் புள்ளிகள்; கலங்காத மினிஸ்டர் பி.ஏ.,
UPDATED : ஏப் 09, 2024 04:25 AM
ADDED : ஏப் 08, 2024 10:27 PM

''சித்ராக்கா... உங்க வீட்டுக்கு ரெய்டு வரலாமா...''
''வரலாமே... மித்து... இங்க என்ன தேறப்போகுது... பறக்கும் படை சோதனை, ஐ.டி., ரெய்டுன்னு மாவட்டம் முழுக்க களைகட்டுதே''
''ஆமாக்கா... அவிநாசில குடிநீர் வாரிய கான்ட்ராக்டர் 'மணிவேலு'வோட வீடு, ஆபீஸ்னு தொடர்ந்து ரெண்டு, மூணு நாளா ரெய்டு தொடருது...''
''ஏதாவது ஆவணங்கள், பணம், நகைன்னு பறிமுதல் பண்ணியிருக்காங்களா...''
''அ.தி.மு.க., எக்ஸ் மினிஸ்டருக்கு ரொம்ப நெருக்கமானவரா இருந்திருக்காரு... ரெய்டு தொடர்பா ஐ.டி., அதிகாரிங்க தரப்புல மூச்சுவிட மறுக்கிறாங்க...
''பல்லடத்துல தி.மு.க., புள்ளி வீட்டுல ரெய்டு நடத்தி பணம், ஆவணம்னு கைப்பற்றுனாங்க... அவிநாசி ரெய்டுல எதுவும் சிக்கு ச்சாங்கறது தெரியல...''
''மித்து... தொடர் ரெய்டு நடக்கிறதுனால 'ஏதோ இருக்கு'ன்னு அரசியல் வட்டாரத்துல ஒரேபரபரப்பா இருக்கு''
''அது மட்டும் இல்லக்கா... கட்சில இருக்கிற பெரும் புள்ளிங்க, கான்ட்ராக்டருங்க எல்லாம் பீதில தான் இருக்காங்களாம்''
'கைக்காசு கரையுது'
''மித்து... திருப்பூர்ல 'தோழர்' வேட்பாளருக்கு ஆதரவா பிரசாரம் பண்ற கூட்டணிக்கட்சியினருக்கு எதுவும் தேறலையாம்...
''ஆளும்கட்சிக்காரங்களுக்கு பூத் கமிட்டில இருக்கறவங்களுக்கு வெறும் 500 ரூபா அளவுக்குத்தான் கொடுத்திருக்காங்களாம். கைக்காசு போட்டுத்தான் செலவு பண்ண வேண்டியிருக்குன்னு புலம்பித் தள்றாங்க...''
''ஆமாக்கா... இதேபோல, ஒவ்வொரு கட்சிலயும் புலம்பிட்டுத்தான் இருக்காங்க... பணத்தை வீசணும்னு எதிர்பார்க்கிறாங்க... ஆனா கட்டுப்பாடுகளும், கண்காணிப்பும் கூடிப்போச்சுங்கறதுனால சிக்கலா இருக்காம்...''
''மித்து... இந்த வாரத்துல எப்படியும் சப்ளை பண்ணியாகணுமே... மொதல்ல கட்சிக்காரங்களுக்கு... அப்புறம் வாக்காளருங்களுக்கு... பணம்தானே பாதாளம் வரைக்கும் பாயுது...''
''சரியா சொன்னீங்க சித்ராக்கா''
தேர்தல் கமிஷன் பாராமுகம்
''மித்து... தேர்தல் கமிஷன் 'ஸ்ட்ரிக்ட்'ங்கறாங்க... ஆனா, 'சாமி' அமைச்சரோட 'செல்ல'மான பி.ஏ.,வோ, தேர்தல் கூட்டங்கள்ல மொத ஆளா கலந்துக் கிறாரு...
''ஓட்டு கேட்கறது ஒண்ணுதான் பாக்கி... எதுக்கும் கலங்காத இந்த பி.ஏ., மட்டும், தேர்தல் கமிஷன் அதிகாரிங்க கண்ணுக்குத் தெரியவே மாட்டேங்குறாரு...''
''சித்ராக்கா... மஞ்சள் நகர வேட்பாளருக்கு ஓட்டு சேகரிக்க, தாராபுரம் பகுதிக்கு 'விழி' அமைச்சர் போயிருக்காங்க... அணைக்குத் தண்ணீர் விடாததால போராட்டம் நடத்திட்டு வர்ற விவசாயிகள், கருப்புக்கொடி காட்டியிருக்காங்க...
''அமைச்சர் காரைவிட்டு இறங்குல... உள்ளூர் நிர்வாகி ஒருத்தர் விவசாயி களைச் சமாதானப்படுத்த பார்த்திருக்காரு... அப்புறம் வேட்பாளரே போயிருக்காரு... ஆனா முடியாததால பிரசாரம் பண்ணாம திரும்பியிருக்காங்க...
''இதனால டென்ஷன் ஆயிட்டாராம், அமைச்சரோட கணவர். இதெல்லாம் உள்ளூர் நிர்வாகிக்குத் தெரியாதா... நாங்க வரும்போது 'ரூட்' கிளியரா இருக்க வேண்டாமான்னு போட்டுத் தாக்கியிருக் காராம்.
''மக்கள் பிரதிநிதிகள்னா பாராட்டை மட்டுமே கேட்டு குளிர்ந்து போகக்கூடாது... எதிர்ப்பையும் எதிர்கொள்ளுற துணிச்சலும், மக்களிடம் பக்குவமா பேசுற தன்மையும் இருக்கணும்ங்கறத பதவிக்கு வந்தவுடனே ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்கன்னு கட்சிக்காரங்க நொந்து போயிட்டாங்களாம்''
தாமரை வேட்பாளர் சந்தேகம்
''மித்து... திருப்பூர் தாமரைக்கட்சி வேட்பாளர் மேல கேஸ் போட்டுட்டாங்களாமே...''
''ஆமாக்கா... இந்த விவகாரத்துல பறக்கும் படைல இருக்குற கேமராமேன் எடுத்த வீடியோ சில நிமிஷத்துல 'டிவி'ல ஓடுது... தப்பு செஞ்சதா சித்தரிக்கப் பார்க்குறாங்க... பறக்கும் படை அதிகாரிங்க ஆளும் கட்சிக்கு வேலை பார்க்கறாங்களான்னு சந்தேகப்படுறாராம் வேட்பாளர். அவரோட சந்தேகம் நியாயமாத்தான் படுது''
''மித்து... காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பொதுக்கூட்டம் திருப்பூர்ல நடந்துச்சு...
''அவரை மேடைக்கு முன்புறம் வரவேற்க மாவட்டத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தயாரா இருந்தாங்க... ஆனா, பின்புறமா அழைச்சு வந்திருக்காங்க, வேறு நிர்வாகிங்க...
''இதப்பார்த்து டென்ஷனாகி நிர்வாகி ஒருத்தரு திட்டியிருக்காரு... 'சரி... சரி விடுங்க'ன்னு மூத்த நிர்வாகி சமாதானம் பண்ணுன பிறகு செல்வப்பெருந்தகை ஒருவழியா மேடை ஏறியிருக்காரு''
''காங்., ஸ்டைலே தனிதான் மித்து...''
''சித்ராக்கா... செல்வப்பெருந்தகை பேசுறப்ப கமல் கட்சியோட மாவட்டச் செயலாளர் கமல்ஜீவா சால்வை போட பக்கத்துல வந்திருக்காரு... 'கொஞ்சம் பொறுங்க'ன்னு செல்வப்பெருந்தகை சொல்லியிருக்காரு... பொறுமை இழந்த கமல்ஜீவா மாவட்ட காங்., செயலாளர் கிருஷ்ணனுக்கு சால்வை அணிவிச்சிட்டாராம்''
''மித்து... கமல் கட்சிக்காரருக்கு, கமல் அளவு பொறுமை இல்லேன்னு சொல்லு''
''சித்ராக்கா... பல்லடத்துல வயசானவர செருப்பால அடிப்பேன்னு ஆளும்கட்சிக்காரங்க சொன்னது மக்கள் மத்தியில ரொம்பவே எபக்ட் ஆயிருச்சு... ஓட்டு கேட்டு வரும்போது கச்சேரிய வச்சுக்கலாம்னு மக்கள் வெயிட்டிங்''
ஆசிரியர்களுக்கு மிரட்டல்
''மித்து.. தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியில ஈடுபடுறாங்க... இவங்களுக்கு இரண்டாம்கட்டப் பயிற்சி வழங்க தேர்தல் அதிகாரி மூலம் பள்ளி நிர்வாகம் அல்லது ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கணும்...
''உடுமலை, குடிமங்கலம் பகுதி தனியார் பள்ளி ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு 'நீங்க நேரடியா வந்து ஆர்டரை வாங்கு ங்க...'ன்னு சொல்லிஇருக்காங்க...
''நாங்க அவ்ளோ துாரத்தில் இருந்து வர முடியாது அப்படீன்னு ஆசிரியர்கள் சொல்லியிருக்காங்க... 'வரலேன்னா தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கறீங்கன்னு போலீஸ் மூலம் வழக்கு பதிவோம்'ன்னு ஆசிரியர்களை மிரட்டியிருக்காங்க... ஆசிரியர்கள் நொந்து போயிருக்காங்க...''
''அட... பாவமே' என ஆதங்கப்பட்டாள் சித்ரா.
''மித்து... திருப்பூர் தெற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஆய்வுக்கு போயிருக்கார். ஓட்டுச்சாவடி அமைக்க போதுமான வசதி இருக்கான்னுபார்த்திருக்கார்.
''ஒரு வகுப்பறையில் விட்டத்தில, றெக்கையெல்லாம் வளைஞ்சு நெளிஞ்சு பேன் இருந்துச்சாம். பார்த்தவுடனே ஷாக் ஆயிட்டாராம். வகுப்பறை சுவர்களும் அழுக்குப் படிஞ்ச மாதிரி இருந்துச்சாம்.
''வகுப்பறையை மாணவர்கள் படிக்க உகந்ததா மாத்துங்கள்ன்னு கமிஷனர் சொன்னாராம்''
''சித்ராக்கா... நம்ம பள்ளிங்கற மன நிலை மாணவர், ஆசிரியர்கள்னு இருதரப்புக்கும் இருக்கணும். பராமரிப்பும் அடிக்கடி செய்யணும். அப்படியிருந்தா பள்ளி நல்லா இருக்கும்''
பணம் பறிக்கும் அலுவலகம்
''மித்து... உட்பிரிவுடன் கூடிய வீட்டு மனை பிரிக்கும் போது 'டிடிசிபி' அப்ரூவ்டு வாங்க ஒவ்வொரு மனைக்கும் தலா 400 ரூபா கட்டச்சொல்றாங்களாம்...
''மனையைக் கிரயம் செய்றப்ப ஒவ்வொரு மனைக்கும் மீண்டும்தலா 400 ரூபா செலுத்தணும்னு திருப்பூர் பத்திரப்பதிவு ஆபீஸ்ல சார்பதிவாளருங்க நெருக்கடி தர்றாங்க... கேட்டா மேலிட உத்தரவுன்றாங்களாம்..
''தைரியமா இதை எதிர்கொள்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்ட்ட வசூல் பண்றதில்லையாம். மத்தவங்ககிட்ட மிரட்டியே காசை அள்றாங்களாம்''
''சரிக்கா... என்னையும் மிரட்டாதீங்க... மொதல்லயே வெயில் மிரட்டறது போதாதா...''
''மித்து... அதுக்குத்தான் கூலா முலாம் பழம் ஜூஸ் இருக்கே''
இருவரிடமும் கலகலப்பு!

