ADDED : மே 18, 2024 09:01 AM

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் லைசென்ஸ் வழங்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன, எப்படி விண்ணப்பிப்பது போன்ற சந்தேகங்களுக்கு, விளக்கம் அளிக்குமாறு, 'இண்டே பெட் அனிமல் வெல்பேர் சொசைட்டி', செயலாளர், உமாமகேஸ்வரனிடம் கேட்டோம்.
அவர் கூறியதாவது: பப்பிகளுக்கு, கென்னல் கிளப் ஆப் இண்டியா (கே.சி.ஐ.,) சார்பில், பிரத்யேக சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்கான படிவத்தில், உரிய பப்பியின் பெற்றோர் விபரங்கள் அடங்கிய சான்றிதழ், ப்ரீடர் விபரம், 'மேட்டிங்' செய்ததற்கான ஆதாரம், தடுப்பூசி போட்டதற்கான மருத்துவரின் அறிக்கை, பப்பியை விற்பதாக இருந்தால், புதிய ஓனர் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, உரிய தொகை செலுத்தினால் போதுமானது.
இச்சான்றிதழ் வழங்கும் போதே, மைக்ரோ சிப் அளிக்கப்படுகிறது. இதை மருத்துவர்கள் மூலம், பப்பி உடலில் பொருத்தி கொள்ளலாம். இதை ஸ்கேன் செய்தால், பப்பியின் மருத்துவ அறிக்கை உட்பட, அனைத்து விபரங்களும் தெரிந்து கொள்ளலாம். சென்னை, கோவை, சேலம் போன்ற மெட்ரோ சிட்டிகளில், கே.சி.ஐ., அங்கீகாரம் பெற்ற கிளப்கள் செயல்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பிக்க, www.kennelclubofindia.org என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
தமிழக அரசு தற்போது, உள்ளாட்சி அமைப்புகள் மூலம், லைசென்ஸ் வழங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, கே.சி.ஐ., சான்றிதழ் வைத்திருப்பவர்கள், லைசென்ஸ் பெறுவது எளிது. இச்சான்றிதழில், பப்பி குறித்த அனைத்து விபரங்களும் இருக்கும். கே.சி.ஐ., சான்றிதழ் பெறாதவர்களுக்கு, லைசென்ஸ் வழங்கும் பட்சத்தில், கட்டாயம் மைக்ரோசிப் பொருத்த வேண்டும்.அப்போது தான், சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில், பப்பி தொலைந்தாலோ, நாய் கடி உள்ளிட்ட அசம்பாவிதம் ஏற்பட்டாலோ, பப்பி வளர்க்க முடியாமல், தெருவில் விட்டு சென்றாலோ, ஓனரை எளிதில் அடையாளம் காண முடியும்.

