ADDED : ஏப் 06, 2024 08:32 AM

''முன்னங்காலை துாக்கி சீறிக்கிட்டு நிக்கிற குதிரை பிரம்மாண்டத்தோட உச்சம். இத பாக்குறதுக்குன்னே சின்ன வயசுல, என் தாத்தாவோட அந்தியூர் குதிரை சந்தைக்கு போவேன். நீண்ட நெடிய போராட்டத்துக்கு அப்புறமா இப்பதான் குதிரை வாங்க முடிஞ்சது,'' என்கிறார், கோவையை சேர்ந்த குகன்கார்த்திக். குதிரையோட உயரம், வேகம், மின்னும் வனப்பான தோல், வசீகரத்துக்காகவே, இளசுகளின் செல்லப்பிராணியாக இது மாறிவிட்டது. நாய், பூனை, பறவைகளை வீட்டுல வச்சு பராமரிக்கலாம். ஆனா.., குதிரையை?
சொல்கிறார், குகன் கார்த்திக்...''வீட்டு பக்கத்துல குதிரைக்கு தனி இடம் இருக்கு. குதிரை எப்போதும் நடந்துக்கிட்டு, ஆக்டிவ்வா இருக்கறதால நிறைய ஸ்பேஸ் வேணும். நான் காலேஜ் படிக்கும் போது தான் குதிரை வாங்க, வீட்ல பர்மிஷன் கிடைச்சுது.குஜராத்- ராஜஸ்தான் எல்லையில் இந்த குதிரை வாங்குனேன்; கத்தியவாரி ப்ரீடு. இது பொண்ணுங்கறதால, நிலா-ன்னு பேர் வச்சோம். ஒன்றரை வயசா இருக்கும் போது வீட்டுக்கு வந்துச்சு. இப்போ, நாலரை வயசாகுது. ரொம்ப சாது. ஆனா, ரைய்டு கிளம்புனா, புயல் வேகம் தான். ஆரம்பத்துல மேல ஏறுனாவே, கீழ தள்ளிவிட்டுரும். இனிப்புன்னா ரொம்ப பிடிக்கும். அதனால, கடலைமிட்டாய் வாங்கி கொடுத்து தான் ரைய்டுக்கு பழக்குனேன், என்றார்.'கடலை மிட்டாயா...? வேற என்னெல்லாம் சாப்பிடும்?' எனக்கேட்க...
''குதிரை மசால் புல், வரப்புல், பச்சைப்புல், மக்காச்சோளம் தட்டை, கடலைக்கொடி, வைக்கோல் புல் நல்லா சாப்பிடும். கம்பு, கோதுமை, ராகி, கொள்ளு வச்சா உடனே காலியாகிடும். நிலாவ பாக்காம துாங்க போகமாட்டேன். வெளியூருக்கு போனாலும், வீடியோகால் பேசுவோம். இவளுக்கு என்னோட எல்லா பீலிங்கும் புரியும். நான் சோகமா இருந்தா என் முகத்தோட, இவ முகத்தை வச்சி தேய்ச்சு, ஆறுதல் சொல்லும்,'' என்றார்.
கொட்டகையின் பின்னிருந்து மற்றொரு குட்டிக்குதிரை, குகனை பார்த்து சீறிப்பாய்ந்தது. 'வேலா...! பஸ்ஸ்ஸ்....'னு, குகன் அதட்டியதும், அப்படியே நகராம நின்னுடுச்சு.இது வேறயாங்கற, மைண்டு வாய்ஸ் புரிஞ்சிடுச்சு போல. இது நிலாவோட பையன்னு அறிமுகப்படுத்தினார் குகன். லஞ்ச் டைம் வந்துடுச்சில்ல... அதான் அம்மாவ தேடுறான்னு சொல்லிட்டு இருக்கும் போதே, மகனை காணாத பரிதவிப்பில், கனைத்தது நிலா.தாயிடம் மகனை கொண்டு போய் விட்ட குகன், '' இப்போ இவங்க தான் என்னோட உலகம்'' என்றார்.
அதை ஆமோதிப்பது போலவே, மீண்டும் குதிரை கனைத்தது!

