வலியால் துடிக்கும் ஜீவன்களை வாரி அணைக்கும் உ ள் ள ங் கள்
வலியால் துடிக்கும் ஜீவன்களை வாரி அணைக்கும் உ ள் ள ங் கள்
ADDED : ஜூன் 15, 2024 09:05 PM

கல்லுாரியில் படிக்கும் போது, ரோட்டில் அடிபட்டுக்கிடந்த தெருநாயை மீட்டு சிகிச்சை அளித்தோம். இதை தெரிந்த நண்பருக்கு தத்து கொடுத்த போது மனநிறைவு ஏற்பட்டது. இதற்கு பின், எங்கு தெருநாய்கள் அடிப்பட்டாலும், நண்பர் நவீத்துடன் இணைந்து, களத்தில் இறங்கிவிடுவோம். சிகிச்சைக்கு பின், அதே இடத்தில் விட்டுவிடுவோம்.
கடந்த 2020 ல், மதுரை, கோச்சடையில் வாத நோயால் ஒரு தெருநாய் துடிதுடித்தது. வார்த்தையால் சொல்ல முடியாத ரணங்களோடும், காயங்களோடும் கிடந்த அத்தெருநாயை, கையால் வாரி அணைத்து, மருத்துவமனை நோக்கி ஓடினோம். இதை வேடிக்கை பார்த்தவர்களுள், நல்லுள்ளம் கொண்ட ராஜேஷ் என்பவர், அவரின் நிலத்தை இச்சேவை பணிகளுக்கு, குத்தகைக்கு கொடுத்தார். இப்படி உருவானது தான் 'சேப் ஹோம் பவுண்டேஷன்' என்கிறார், அதன் நிர்வாகி சாருஹாசன்.
இதன் பணிகள் என்ன?
தெருநாய்களுக்கு சிகிச்சை மையம் உருவாக்கியுள்ளோம். 3 முழு நேர டாக்டர்களுடன் மொத்தம் 11 பேர் பணிப்புரிகின்றனர். சிகிச்சை காலம் வரை, தங்க வைத்து உணவு கொடுக்கிறோம். கருத்தடை செய்து, அதன் இடத்திலே கொண்டு போய் விட்டுவிடுவோம்.
வயதான, உடல் ஊனமுற்ற நாய்களை நாங்களே இறுதிவரை பார்த்துக் கொள்கிறோம். தற்போது, 120 நாய்கள் இங்கு இருக்கின்றன. கடந்த 7 ஆண்டுகளில், 4 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட, தெருநாய்களை மீட்டுள்ளோம். இங்கு கொண்டு வரப்படும் நாய்களுக்கு, அளிக்கப்படும் சிகிச்சை, கருத்தடை, தடுப்பூசி செலுத்திய விவரங்களை, 'மைக்ரோ சிப்'பில் பதிவேற்றப்பட்டு, அவைகளின் உடலில் செலுத்திவிடுவோம். வீட்டு நாய்களுக்கும் குறைந்த கட்டணத்தில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எதிர்கால திட்டம் என்ன?
இந்தியாவிலேயே நாய்கடியால் பாதிக்கப்படுவோர், தமிழகத்தில் தான் அதிகம் உள்ளனர். இதை கட்டுப்படுத்தும் முயற்சியாக, விலங்கு நல வாரியத்தின் அனுமதியுடன், 'ரேபிஸ் இல்லா மண்டலம்' என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, விரைவில் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மதுரையில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை குறித்து, சர்வே எடுத்து வருகிறோம். மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியோடு, ரேபிஸ்க்கான தடுப்பூசி போடுதல், இலவசமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும்.
வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாய்களுக்கான பிசியோதெரபி, நீரில் நடக்க வைப்பதற்கான குளம், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் கருவிகளுடன், அதிநவீன சிகிச்சை மையம் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
இப்பணிகளுக்கு, மாதந்தோறும் ரூ.5 லட்சம் வரை செலவாகிறது. மக்கள் ஆதரவில்லாமல் எதுவும் நடக்காது. கொஞ்சம் அன்பும், கருணையும் காட்டினால், தெருநாய்களின் வாழ்நாளை நீட்டிக்கலாம்.
இவர்களுக்கு உதவ 80722 67161
ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு... செல்லக்குட்டியே!
நாட்டுக்கு ஒரு ராஜா மாதிரி, டேங்குக்கு ஒரு பிளவர்ஹார்ன் தான் வளர்க்க முடியும் என, அதிரிபுதிரியாய் ஆரம்பித்தார், கோவை, ஏஞ்சல் அக்குவாரியம் பெட் ஓனர் சுரேஷ். ஆரம்பமே அசத்தலா இருக்கே என்றதும், தரையில் போட்ட மீன் போல, துள்ளலோடு பேச ஆரம்பித்தார்.
நிறைய பிஷ் வெரைட்டி இருக்கு. இதுல, சில வெரைட்டியை, எவ்ளோ விலை கொடுத்தும் வாங்கி வீட்டுல வளர்க்க, பெட் லவ்வர்ஸ் விரும்புவாங்க. அந்த வரிசையில முன்னணியில இருக்கறது பிளவர்ஹார்ன்.
ரெட், ஆரஞ்ச், ப்ளூ, கிரீன்னு மல்டி கலர்ல, யுனிக்கான காமினேஷன்ல இருக்கறதால, பாக்குறதுக்கே ஷைனிங்கா இருக்கும். தண்ணீயில நீந்துனா, ரசிச்சிட்டே இருக்கலாம்.
மண்டை மேல இருக்கற கொண்டை தான், இதோட அழகே. அது எந்த அளவுக்கு வளருதோ, அந்த அளவுக்கு செல்வமும் வளரும்ணு, பிஷ் லவ்வர்ஸ் நம்புறாங்க.
'மேல்' பிளவர் ஹார்ன் அதிகபட்சமா 30 செ.மீட்டரும், 'பீமேல்' பிஷ், 15 செ.மீ., வரைக்கும் வளரும். இதோட டேங்கில் மோட்டார் கட்டாயம் செட் பண்ணணும்.
நல்ல புட், மெயின்டனென்ஸ் இருந்தா, 12 வருஷம் வரைக்கும் வாழும். ஆனா, இது வளரும் போது விளையாடுறதுக்கு ஏத்தமாதிரி, டேங்க் பெருசா வைக்கணும்.
ஒரு டேங்குல ஒரு பிளவர்ஹார்ன் தான் வைக்கணும். இது ரொம்ப கோவக்காரன். மத்த மீனை புடிச்சி சாப்பிடும்.
ஓனரோட ஈஸியா அட்டாச் ஆகிடும். இதோட டேங்க் வெளிய கை நீட்டுனா, ஹாய் சொல்ல வர்ற மாதிரி, வேகமா வந்து பப்பிள்ஸ் விடும். இதை பார்த்தாவே, குட்டீஸ் குஷியாகிடுவாங்க.
2 செ.மீ., சைஸ்ல இருக்கற ஒரு பிளவர்ஹார்ன் வெறும் 150 ரூபாய் தான். குட்டியா இருக்கும் போது, தனியா பவுல்ல வச்சியும் வளர்க்கலாம்.
பாசக்கார 'சிங்கம்!'
அரிய வகை நாயினமான, 'சோவ் சோவ்'--வை, விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அனுப்பங்குளத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரபு வளர்த்து வருகிறார். இதனுடனான பந்தம் குறித்து, நம்மிடம் கூறியதாவது:
'சோவ் சோவ்' ப்ரீட், மற்ற இனங்களை விட சற்று வித்தியாசமானது. இதன் முகம், நிறம், சிங்கம் போல இருப்பதால், இவனுக்கு அந்த பெயரையே வைத்து விட்டோம். சீனாவில் இதை ராணுவத்திற்கு பயன்படுத்துகின்றனர். அந்நாட்டில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட, பிறந்து 56 நாட்களே ஆன, இப்பப்பியை நாங்கள் வாங்கிய போது, அதன் எடை எட்டரை கிலோவாக இருந்தது. இது ஹன்ட்டிங் ப்ரீட் என்பதால், நிறைய பேர் வளர்ப்பதில்லை. தற்போது இதற்கு 6 வயதாகிறது.
எளிதில் புதிய ஆட்களிடம் பழகாது. ஆனால், பப்பியாக இருக்கும் போதே பராமரித்தால் ஓனரிடம் மிகவும் நெருக்கமாகிவிடும். 'சிங்கத்திற்கு' என் மீது பாசம் அதிகம். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமிருந்தாலும், நான்தான் வாக்கிங் அழைத்து செல்வேன். சாப்பாடு ஊட்டிவிட வேண்டுமென அடம் பிடிக்கும். இவனை பார்க்காமல் என்னால் இருக்கவே முடியாத அளவுக்கு நெருக்கமாகிவிட்டான், என்றார் பிரபு.
ஸ்ட்ரெஸ் வராம பாத்துக்கணும்
ஆமை பொறுத்தவரை 20-- 150 வருடம் வரை வாழும், நீர் மற்றும் நில வாழ் உயிரினம். இதை வீட்டில் வைத்து வளர்ப்பவர்கள், அதன் உடல் வெப்பநிலையை (25---27°C) சீராக வைத்திருப்பது அவசியம். இதன் டேங்கில், குளோரின் கலக்காத சுத்தமான தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கமர்ஷியல் உணவுடன் மீன், கேரட், கீரைகள் போன்ற உணவுகளும் சாப்பிட கொடுக்கலாம். தினமும், காலை, மாலை வேளையில், சூரிய வெயிலில் (1--2 மணி நேரம்) வைத்திருப்பது நல்லது. தோட்டம் மாதிரியான வெளியிடங்களில் வைத்து வளர்ப்பவர்கள் குடற்புழு நீக்கம் செய்து கொள்ள வேண்டும். தினசரி உணவு எடுத்து கொள்வது, கழிவுகளை வெளியேற்றுவது, அவற்றின் தோள் மற்றும் ஓடு பளபளப்பு, கண்கள், மற்றும் மூக்குப்பகுதி, மூச்சு விடுதலின் அளவீடு ஆகியவற்றை கவனிக்க வேண்டும். இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். மேலும், ஆமையை கோபப்படுத்தும் போது, அவை கடிக்கவும் வாய்ப்புள்ளது.
- பெ.அஞ்சலிதேவி,
கால்நடை மருத்துவர், கோவை.
ஜூன் 23ல் கோவையில் டாக் ஷோ
கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்புல, வர்ற 23ம் தேதி, கோவை, நவ இண்டியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில, சேம்பியன்ஷிப் டாக் ஷோ நடத்துறாங்க.
உங்க பப்பியோட அழகு, அறிவு, தனித்திறமையை காட்டுறதுக்கான நேரம் வந்தாச்சு. கிட்டத்தட்ட 11 டைட்டில்ல, போட்டி நடத்துறாங்க. எல்லா ஒரிஜினல் ப்ரீட்சும் கலந்துக்கலாம். கன்னி, கோம்பை, சிப்பிப்பாறைன்னு, நாட்டு நாய்கள் வளக்குறவங்களுக்கு, பிரத்யேகமா போட்டி இருக்குது. இதுல, டைட்டில் வின் பண்ற டாக்ஸ் மட்டுமில்லாம, பெஸ்ட் பப்பி, இண்டியன் ப்ரீட், பெஸ்ட் ஹேண்டுலர், பெஸ்ட் ஜூனியர் ஹேண்டுலருக்கும், மெடல், சர்டிபிக்கேட் காத்திருக்கு. அதனால, உங்க செல்லக்குட்டியோட, கோயமுத்துார் வந்துடுங்க. போட்டி பத்தி தெரிஞ்சிக்கிறதுக்கு, 98430 79767/ 95852 66566 எண்களுக்கு டயல் செய்யலாம்.
பீனாவுக்கும், ஜூலிக்கும் சண்டையே வந்ததில்ல...
''பொதுவா பூனைக்கும், நாய்க்கும் ஏழாம் பொருத்தம் என்பார்கள்.. ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டால், 'லொள்..லொள்...; மியாவ்வ்...!' என ஒரே கூச்சல் தான். ஆனால், ஒரே வீட்டில் சிறு வயது முதல் பூனை, நாய்குட்டியை வளர்த்தால், அவர்கள் சகோதரர்கள் போல பழகுவார்கள்,'' என்கிறார், ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்கா பகுதியை சேர்ந்த கலைவாணி. தன் செல்லப்பிராணிகள் குறித்து, ஆர்வமாய் படபடத்தார்.
எங்க வீட்டுல, பெட்ஸ பாத்துக்கறது பசங்க தான். பொண்ணு ராஜஸ்ரீயும், பையன் தஸ்வினும் இருந்தா போதும். இவங்களுக்கே, தலா 10, 8 வயசு தான் ஆகுது. ஆனா, ஸ்கூல் முடிச்சிட்டு இவங்க வீட்டுக்கு வந்தா, பீனாவும் (பூனை), ஜூலியும்(நாய்) இவங்க பின்னாடியே தான் சுத்திக்கிட்டு இருக்கும். நாலு பேரும் பிரெண்ட்ஸ் மாதிரி, ஜாலியா விளையாடுவாங்க. பீனாவையும், ஜூலியையும் குளிப்பாட்டுறது, மேக்கப் போட்டு விடுறது எல்லாமே பசங்க தான். பெரிய மனுஷங்க மாதிரி பொறுப்பா நடந்துக்குவாங்க. வீட்டுல குட்டீஸோட சேர்ந்து, செல்லப்பிராணிகளும் வளர்றதால, ஒவ்வொரு நாளும் சேட்டைக்கும், கொண்டாட்டத்துக்கும் பஞ்சமில்லை, என்றார்.

