ADDED : பிப் 03, 2024 09:03 AM

செல்லபிராணிகளுக்கு ஏதாவது அடிபட்டாலோ, வேறு வகையில் பாதிக்கப்பட்டாலோ டாக்டரிடம் அழைத்துச் செல்லும் முன், வளர்ப்போரே சில முதலுதவிகளை செய்திடலாம். நாய், பூனை என எந்த பெட்டாக இருந்தாலும், காயம் ஏற்பட்டால், அதை அப்படியே விட்டுவிட்டால் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும்.
இதை தடுக்க உடனே அந்த இடத்தை, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம். காயம்பட்ட இடத்தில் ரத்தம் வந்தால், துாய்மையான காட்டன் துணியால் இருநிமிடங்கள் வரை, அழுத்திபிடிக்க வேண்டும். இதன்மூலம், ரத்தம் கசிவது நின்றுவிடும். விபத்தால் எலும்பு முறிதல் உள்ளிட்ட சமயங்களில் அடிபட்ட இடத்தை அசைக்காமல், நகர்த்தாமல், அப்படியே மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம்.
பதட்டத்தில் அடிபட்ட இடத்தை நீவிவிடுவது, கட்டு போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், மென்மையான எலும்புகள் கூடுதலாக முறியவும் வாய்ப்புள்ளது. பெட்ஸ்களுக்கான மாஸ்க், மருந்தகங்களில் கிடைக்கிறது. காயத்தை நாக்கால் நக்காமல் இருக்க, இதை அணிவித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம்.
சாக்லெட், எலி மருந்து என ஏதாவது விஷத்தன்மை கொண்ட பொருட்களை சாப்பிட்டால், 'ஆக்டிவேட்டட் சார்க்கோல்' எனும் அடுப்புக்கரியை தண்ணீரில் கரைத்து குடிக்க கொடுக்க வேண்டும். முதலுதவி செய்த பிறகு, உடனே கால்நடை மருத்துவரை அணுகுவதே சிறந்த தீர்வாக அமையும்.
- சந்தியா, கால்நடை மருத்துவர், சென்னை.

