ADDED : அக் 19, 2024 06:19 AM

நாய்களுக்கான கர்ப்பகாலம் சராசரியாக 64 -- -66 நாட்கள். கருத்தரித்த, 30 வது நாளில், 'அல்ட்ராசோனோகிராபி ஸ்கேன்' செய்து, வயிற்றில் உள்ள குட்டிகளின் எண்ணிக்கையை அறியலாம். இதேபோல், 45 வது நாளில், எக்ஸ்ரே மூலம், பப்பிகளின் வளர்ச்சியை உறுதி செய்து கொள்ளலாம். பிரசவ சமயத்தில், தாய் நாயானது முன்னரே பழகிய இடத்தில் இருந்தால், பதற்றமின்றி இருக்கும்.
பிரசவத்தை பொறுத்தவரை, மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையின் போது, தாய் நாயின் கர்ப்பப்பை சுருங்கி விரிய தொடங்குவதோடு, கருப்பை துவாரம் இளகி விரிய தொடங்கும். இச்சமயத்தில், அதன் உடல் வெப்பநிலை, சற்று குறைவாகவே இருக்கும். உடலில் நடுக்கம் ஏற்படுவதை அறியலாம். இரண்டாவது நிலையில், வயிற்றின் அழுத்தம் வெளிப்படையாக தெரிய துவங்கி, பப்பி பிறக்க ஆரம்பிக்கும். வயிற்றில் உள்ள ஒரு பப்பி வெளியேறி சுமார் 1-2 மணி நேரத்திற்குள், அடுத்த பப்பி பிறக்க வேண்டும். மூன்றாவது நிலையில், நஞ்சுக்கொடி வெளியேறும்.
இம்மூன்று நிலைகளில் காலதாமதம் ஏற்படுதல், தாய் நாயால் கருப்பையை அழுத்த இயலாமை, பப்பிகள் அதிக எடையுடன் இருந்தால், பிரசவிக்க முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில், உடனே கால்நடை மருத்துவரை அணுகுவது அவசியம். சிசேரியன் செய்வதற்கான தேவை இருப்பதை, மருத்துவரால் மட்டுமே முடிவு செய்ய முடியும்.
பிரசவத்திற்கு பின், தாய் நாய்க்கு, கருப்பை அழற்சி, மடிவீக்கம் இருந்தால், கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். இச்சமயத்தில், தாய் நாய்க்கு, மருத்துவர் பரிந்துரைப்படி, ஊட்டச்சத்து மிக்க உணவு அளிக்க வேண்டும்.
-- டாக்டர் ஆர். இந்துமதி,
அரசு கால்நடை உதவி மருத்துவர், கோவை.

