ADDED : அக் 19, 2024 06:19 AM

கோவை, கணபதியில், சமீபத்தில் நடந்த, திருநங்கை கொலை வழக்கில், 'வில்மா' என்ற லேப்ரடார் நாய், சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை மோப்பம் பிடித்து, சில நிமிடங்களில், குற்றவாளியின் வீட்டிற்கே அழைத்து சென்றதாக, போலீஸ் தரப்பில் தகவல் கிடைத்தது. பலரின் புருவங்களை உயர்த்த செய்த இச்சம்பவத்தை தொடர்ந்து கோவை, போலீஸ் மோப்பநாய் பிரிவுக்கு நேரில் சென்றோம். நாய்களுக்கான பயிற்சியில் படு பிசியாக இருந்தனர் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அம்பலவாணன் மற்றும் ராஜேஷ்பாபு.
அவர்கள் நம்மிடம் பகிர்ந்தவை:
குற்றம் நடக்காமல் பார்த்து கொள்வதும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதும் போலீசாரின் தலையாய பணி. இதில், தடயங்களை துல்லியமாக கண்டறிந்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுபவை மோப்பநாய்களே.
மனிதர்களை விட, நாய்களுக்கான மோப்பத்திறன் நான்கு மடங்கு அதிகம். நேர்த்தியான உடல்வாகு கொண்ட பப்பிகளை அடையாளம் கண்டு ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, கோவை உட்பட சில மாவட்டங்களில், மோப்பநாய் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் பற்றி?
மோப்பத்திறன் அதிகம் கொண்ட, ஜெர்மன் ஷெப்பர்டு, பெல்ஜியம் மலினோய்ஸ், லேப்ரடார் போன்ற ப்ரீடுகளை தான், பயிற்சிக்கு தேர்வு செய்வோம். இதற்கு, உடல் தகுதித்திறன் குறித்த சான்றிதழ், கால்நடை மருத்துவரிடம் பெறப்படும்.
இந்த வகையான நாய்கள் கொலை, கொள்ளை சம்பவங்களில், அங்கிருக்கும் தடயங்கள், குற்றவாளி விட்டு சென்ற பொருட்கள், அதில் வரும் வியர்வை, ரத்த வாசனையை மோப்பம் பிடித்து, அந்த நபர் சென்ற வழியை அடையாளம் காட்டும். சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் தகவல் கிடைத்தால், குற்றவாளியை கையும் களவுமாக பிடிக்குமளவுக்கு, மோப்ப நாய்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடும்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு, தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வாசனையை, சில நிமிடங்கள் நுகர செய்து, நாய்களை தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்துவோம். இதேபோல வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கும், வெடிபொருளில் சேர்க்கப்படும் முக்கிய மூலப்பொருட்களின் வாசனையை நுகர செய்து, தேடுதலில் ஈடுபடுத்தும் போது, வெடி பொருள் இருக்குமிடத்தை, அடையாளம் காட்டும்.
போதைப்பொருளை வாயில் எடுத்தாலும் சிக்கல் இல்லை. ஆனால், வெடி பொருளை வாயில் எடுக்கக்கூடாது. இதற்காக, பிரத்யேகமாக பப்பிகளை பழக்குவோம். பொது இடங்களில், திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபரை, நாய்கள் சரியாக அடையாளம் காட்டிவிடும். சந்தேகப்படும் நபரின் பயம், பதட்டம், அவரின் உடலில் அதீதமாக சுரக்கும் வியர்வை போன்ற அறிகுறிகள் மூலம், மோப்ப நாய்கள் எளிதில் கண்டுபிடித்துவிடும்.
மோப்ப நாய்களுக்கு சுவாச ரீதியான பிரச்னை வருமா?
சென்னை, வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை பல்கலையில், மோப்பநாய்களுக்கு, ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. போதை, வெடிபொருட்களை சில நிமிடங்கள் நுகர்ந்தாலே, அந்த வாசனையை பல மணி நேரம் தக்க வைத்துக் கொள்ளும் திறன் நாய்களுக்கு உள்ளது. இதனால், சுவாச ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டதில்லை. சத்தான உணவு, முறையான பயிற்சிகள் அளிக்கப்படுவதால், இப்பிரிவில் உள்ள நாய்கள், வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றன.

