ADDED : மே 18, 2024 09:21 AM

வாயில்லா ஜீவன்களின் கண்ணீரை துடைக்கும், கருணை கரங்களுக்கு சொந்தக்காரர் சத்யா மோகன். கடந்த 25 ஆண்டுகளாக, தெருவோர பிராணிகளின் துயர் துடைக்கும் இவரை, சென்னை, ஆதம்பாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தோம்.
பிராணிகள் நேசம் பற்றி?
இந்த பூமி காக்கை, குருவிகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. இயற்கை மீது இச்சை கொண்ட அனைவருக்கும், உலக உயிர்கள் மீது அன்பும், பாசமும் இருக்கும். சிலருக்கு, அவற்றின் கண்ணீரைத் துடைக்கும் பரிவு இருக்கும். பிற உயிர்கள் மீதான பரிவால், கடந்த 25 ஆண்டுகளாக, என்னால் முடிந்ததை அவைகளுக்கு செய்கிறேன்.
குறிப்பாக, 20 ஆண்டுகளுக்கு முன்பே, மாட்டு வண்டிகளில் அதிக பாரம் ஏற்றி, மாடுகளை வதைப்பதற்கு எதிராக போராடி இருக்கிறேன். தினமும், 30 - 40 தெருநாய்களுக்கு உணவளிக்கிறேன். தெருநாய்கள் பெருகினால், அவை கடிக்கும் என சிலர் நினைக்கின்றனர். நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மை கடிக்காது.
சாலையில் அடிபட்டு கிடக்கும் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை மீட்டு உரிய சிகிச்சை அளித்து, அதே இடத்தில் விட்டு விடுவேன். தெருவில் விட முடியாத நிலையில் இருக்கும் விலங்குகளுக்காக, 'தியா பவுண்டேஷன்' என்ற அமைப்பை, உருவாக்கி உள்ளேன். தற்போது என்னுடன், மேலும் சில தன்னார்வலர்களும் இணைந்துள்ளனர்.
இதற்கான செலவுகளை எப்படி
சமாளிக்கிறீர்கள்?
என் சேவைகளை அங்கீகரிக்கும் கால்நடை மருத்துவர்கள், சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சை, குடும்பக்கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை செய்கின்றனர். சிகிச்சை செலவு போக, உணவுக்கு மட்டும் மாதம், 30,000 முதல் 40,000 ரூபாய் வரை செலவாகும். தற்போது, சிலர் நன்கொடை வழங்க முன்வந்துள்ளனர்.
எதிர்கால லட்சியம்?
தற்போது, அடிபட்ட பிராணிகளை ஆட்டோக்களில் தான் ஏற்றிச் செல்கிறோம். பல ஆட்டோ ஓட்டுனர்கள் சவாரி எடுப்பதில்லை. அதனால், ஆம்புலன்ஸ் வாங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கு பெருநிறுவன பங்களிப்பு நிதியிலிருந்தோ அல்லது சேவையாகவோ உதவலாம்.உதவிக்கரம் நீட்ட விரும்புவோர், தொடர்புக்கு: 98404 96361.

