PUBLISHED ON : டிச 21, 2025

சூப்பர் ஹீரோக்களின் அணி சேர்க்கை, வேற்றுலக எதிரிகள், டைம் டிராவல் என, கடந்த 15 ஆண்டுகளில் அவெஞ்சர்ஸ் வளர்த்து வைத்திருக்கும் ரசனையானது, அவதார் போதிக்கும் இயற்கையை மதிப்பது, முதுபெரும் தாயை வணங்குவது உள்ளிட்ட வற்றை ரசிக்க விடாமல் செய்கிறது!
பண்டோரா கிரக வளங்களைச் சுரண்டும் பூமிவாசிகளை, அக்கிரகத்தின் நவி இனத்தவர்கள் எதிர்க்கின்றனர். பூமிவாசியாக இருந்து நவியாக மாறிய ஜேக் சல்லி, அவ்வினத்தைச் சேர்ந்த நெய்த்ரியை மனைவியாக்கி சந்ததி வளர்க்கிறான். முந்தைய பாகத்தில் பூமிவாசிகள் உடனான சண்டையில் ஜேக் சல்லியின் மூத்த மகன் இறந்த நிலையில், அப்போரின் தொடர்ச்சியாக இப்பாகம்!
இதில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் என்ன புதுமை செய்திருக்கிறார்; கடந்த பாகம் போல கடல் தான் இதிலும் கதைக்களம் என்கிறது முதல் 45 நிமிடங்கள்; இதற்குப்பின், கப்பல் வடிவிலான ஒன்றை காற்றில் மிதக்க வைத்து, அதை ஓர் உயிரினம் இழுத்துச் செல்வது போன்ற தனது கற்பனையால் வாய் பிளக்க வைக்கிறார்!
'அதிகார வர்க்கத்தின் பேராசையால் தான் பூமியை இழந்தோம்' என்கிற அரசியல், 'ஒரு கொலை இன்னொரு கொலைக்கு வழிவகுக்கும்' என்கிற அகிம்சாவாதம், 'மூதாதையர்களின் தொடர்ச்சி நாம்' என்கிற மெய்யியல் உள்ளிட்டவற்றை முப்பரிமாண காட்சிகளோடு கருத்துகள் வழியாகவும் உணர்த்தி இருக்கின்றனர்.
திமிங்கலம் மாதிரியான டுல்குன் உயிரினம் பூமிவாசிகளை தாக்கும் சண்டைக் காட்சி ஆர்ப்பரிக்க வைக்கிறது; இவ்விதமான சண்டை காட்சிகளோடு குடும்பபாசம், இழப்பின் வலி என உணர்வுக் குவியலாகவும் திரைக் கதை இருக் கிறது.
'இப்படம் நிறைவுற்றதும் திரையில் பளிச்சிடும் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே டீசருக்கு, அவதாரின் மூன்றே கால் மணி நேரம் காணாத வரவேற்பு; இச்செய்தியே இப்படத்திற்கான தீர்ப்பு.
@block_B@ அவெஞ்சர்ஸ் தந்திருக்கும் ரசனையுடன் மோதி சரிந்திருக்கும் அவதார்!@@block_B@@
@block_B@ வழக்கமான 'மாஸ், வேற லெவல்' பாராட்டுகள் இப்படத்திற்கு கிடைப்பது சந்தேகமே!@@block_B@@

