/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
அதிகம் அறியப்படாத கே. டி.நீர்வீழ்ச்சி
/
அதிகம் அறியப்படாத கே. டி.நீர்வீழ்ச்சி
ADDED : செப் 10, 2025 10:04 PM

பெங்களூரில் பொழுதுபோக்க பூங்கா, ஏரிகள், அருங்காட்சியகம், அரண்மனை என்று இருந்தாலும், அணை, நீர்வீழ்ச்சி என்று நீர்நிலைகள் எதுவும் இல்லை. மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, குடகு, ஷிவமொக்கா, உத்தர கன்னடாவில் அதிக நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அங்கு சென்றால் தான் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க முடியும் என்றும் இல்லை.
பெங்களூருக்கு மிக அருகில் உள்ள ராம் நகரிலும் ஏராளமான சிறிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஆனால் இதுபற்றி சுற்றுலா பயணியருக்கு அதிகம் தெரிவது இல்லை. அதிகம் அறியப்படாத நீர்வீழ்ச்சிகள் பெங்களூரை சுற்றி நிறைய உள்ளன. இதில் ஒன்று கே.டி.நீர்வீழ்ச்சி. ராம்நகரின் கனகபுரா தாலுகா ஹுனசலநாதா கிராமத்தில், இந்த நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது.
இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வது எளிதான விஷயம் இல்லை. கரடுமுடான சாலைகள், வனப்பகுதி வழியாக பயணிக்க வேண்டி இருக்கும். அதுவும் காரில் செல்ல முடியாது. பைக்கிலோ அல்லது நடந்தோ தான் செல்ல முடியும். காரில் சென்றால் கிராமத்திற்குள் தான் விட்டு செல்ல வேண்டும்.
கிராமத்தில் இருந்து 4 கி.மீ., துாரம் வனப்பகுதியில் நடந்து சென்றால், நீர்வீழ்ச்சியை அடைந்து விட முடியும். பைக்கில் செல்லும் போது, 'ஆப் ரோட்டில்' செல்லும் அனுபவம் கிடைக்கும். வனப்பகுதி என்றால் வனவிலங்குகள் அச்சுறுத்தல் இருக்குமோ என்ற பயம் வேண்டாம். இங்கு வனவிலங்குகள் எதுவும் இல்லை. பச்சை, பசலேன காட்சி அளிக்கும் வனப்பகுதி சாலை வழியாக, பைக்கில் அல்லது நடந்து செல்வது புதிய அனுபவத்தை தரும். பாறைகளுக்கு நடுவில் இருந்து பாய்ந்து விழும், நீர்வீழ்ச்சியை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஆழமும் குறைவு தான்.
சுற்றிலும் வனப்பகுதி நடுவில் நீர்வீழ்ச்சி என மனதை மயங்கும். கனகபுராவில் இருந்து ஹுனசலநாதா 27 கி.மீ., துாரத்தில் உள்ளது. இந்த பாதையில் நிறைய கிராமங்கள் உள்ளன. கிராம மக்களின் வாழ்க்கை முறை, காய்கறி தோட்டங்களை பார்த்து செல்லும் அனுபவம் கிடைக்கும்.
பெங்களூரில் இருந்து நீர்வீழ்ச்சி 88 கி.மீ., துாரத்தில் உள்ளது. நண்பர்களுடன் லாங் டிரைவ் சென்று, உற்சாக குளியல் போட நினைக்கும் இளம் தலைமுறையினருக்கு, இந்த நீர்வீழ்ச்சி ஏற்ற இடமாக இருக்கும். அதுபோல குடும்பத்தினருடன் பொழுது போக்கவும் ஏற்ற இடம்.
- நமது நிருபர் -