/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
மலையேற்றத்திற்கு சிறந்த புஷ்பகிரி மலை
/
மலையேற்றத்திற்கு சிறந்த புஷ்பகிரி மலை
ADDED : ஆக 20, 2025 11:34 PM

குடகு மாவட்டம், சோம்வார்பேட்டில் குமர பருவதா எனும் புஷ்பகிரி மலை அமைந்து உள்ளது. இந்த மலை, மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது. சோம்வார்பேட்டை தாலுகாவில் இருந்து 27 கி.மீ., தொலைவில் புஷ்பகிரி மலை உள்ளது. இந்த மலையின் எல்லை பகுதிகள் குடகு, தட்சிண கன்னடா, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.
இளைஞர்கள் இந்த புஷ்பகிரி மலையில் ஏறுவதற்காக, பலர், குறிப்பாக இளைஞர்கள் அதிக பேர் வருகின்றனர். 'மலையேற பிடிக்கும் என்றால் புஷ்பகிரி மலையும் பிடிக்கும்' என உள்ளூர் வாசிகள் கூறுவதை கேட்க முடிகிறது.
இந்த மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால், பீடி, சிகரெட், லைட்டர், மது, பிளாஸ்டிக் போன்றவை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. வனத்துறை அதிகாரிகளின் கடும் சோதனைக்கு பின்னரே, மலையேற அனுமதிக்கப்படுவர்.
புதிதாக மலையேற விரும்புவோர், மலையேற்றத்தில் அனுபவம் உள்ள நபர்களுடன் வருவது சிறப்பு.
ஏனெனில், இந்த மலையேற்றம் 22 கி.மீ., துாரம் கொண்டது. எனவே, புதியவர்கள் அனுபவம் வாய்ந்தவர்களை அழைத்து வருவது நல்லது.
பொதுவாகவே மலையேற்றத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே தனியாக செல்வர்.
பின்புறம் புஷ்பகிரி மலையின் பின்புறத்தில் துவங்கும் மலையேற்றம், கல், முள், பாறைகளை கடந்து மலையின் முன்பகுதியில் வந்து முடிகிறது. செல்லும் வழியில் பல இடங்களில், உயரமான இடத்திலிருந்து தீப்பெட்டிகள் போன்று தெரியும் வீடுகளின் அழகை ரசித்து கொண்டே செல்லலாம். இந்த மலை புஷ்பகிரி தேசிய பூங்காவின் சிறு பகுதியாக உள்ளது. இங்கு விலங்குகளின் நடமாட்டமும் உண்டு; பல விதமான பறவைகளும் காணப்படும்.
மலை, நில பரப்பிலிருந்து 5,617 அடி உயரம் கொண்டது. பல சிரமங்களை கடந்து, மலையின் உச்சியை அடையும் போது, மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என லாம். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை மலையேற்றத்துக்கான சிறந்த மாதங்கள்.
மலையேற்றம் முடிந்து வருவோர், களைப்பாறுவதற்கு, மலையின் அடிவாரத்தில் சிறிய கூடாரங்கள் உள்ளன. அவற்றில், கட்டணம் செலுத்தி, ஓய்வு எடுக்கலா ம்.
எப்படி செல்வது? பஸ்: பெங்களூரில் இருந்து சோம்வார்பேட்டுக்கு நேரடியாகவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் மூலம் சோம்வார்பேட்டை அடைந்து அங்கிருந்து, ஜீப் மூலம் மலையேற்றத்துக்கான பகுதியை அடையலாம்.
- நமது நிருபர் -