/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
ஆதரவற்றோருக்கு உதவும் திருநங்கை கிரண் நாயக்
/
ஆதரவற்றோருக்கு உதவும் திருநங்கை கிரண் நாயக்
ADDED : டிச 21, 2025 05:14 AM

சிக்கபல்லாபூர் டவுனில் வசிப்பவர் கிரண் நாயக், 39. மாற்றுத்திறனாளி திருநங்கையான இவர்,
சமூகத்தில் சிலரால் புறக்கணிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையரின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக போராடி வருகிறார்.
திருநங்கையர் உரிமைகளுக்கான சங்கத்தை நிறுவி, அதன் மூலம் திருநங்கையருக்கு தேவையான உதவிகளை செய்கிறார். இதுகுறித்து கிரண் நாயக் கூறியதாவது: என் சொந்த ஊர் ஆந்திராவின் வாராங்கல் மாவட்டம் நரசம்பேட்டை ஹனுமன் தாண்டா. பிறக்கும் போது பெண்ணாக பிறந்தேன். உஷாநாயக் என பெற்றோர் பெயரிட்டனர்.
போலியோ எங்கள் தாண்டா சமூகத்தில் பெண்களுக்கு, 15 வயதிலேயே திருமணம் செய்து வைப்பர். எனக்கு எட்டு வயதான போது போலியோ பாதிப்பால் இடது கால் செயல் இழந்தது. இதனால், என்னை பெற்றோர் திருமணம் செய்து கொடுக்கவில்லை. ஆனாலும், பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவானது. இதுபற்றி அறிந்த கிருஷ்ணமூர்த்தி என்ற ஆசிரியர், தினமும் என்னை அவரது ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்து சென்றார். எனக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற முயன்ற போது, எனது அம்மாவை அரசு அதிகாரிகள் அலைக்கழித்தனர். கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு பிறகு தான் எனக்கு மாற்றித் திறனாளி சான்றிதழ் கிடைத்தது.
அடையாளம் அப்போதே எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. நான் வளர்ந்து பெரியவன் ஆனதும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன். பத்தாம் வகுப்பு படித்த போது ஹார்மோன் மாற்றத்தால் பெண்ணிலிருந்து ஆணாக மாறுவதை உணர்ந்தேன். எனது நிலைமையை புரிந்து கொண்ட பெற்றோர், ஆணாக மாறுவதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. முதலில் நான் மாற்றுத்திறனாளி. பெண்ணாக பிறந்து தற்போது ஆணாக அடையாளம் காணப்பட்டுள்ளேன். நான் காவியா என்பவரை திருமணம் செய்தேன். ஆனால், இச்சமுகம் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. எனது திருமணத்தை பெரிய பேசும் பொருளாக மாற்றினர்.
அரசு சலுகை இதனால்,ஆந்திராவில் இருந்து வெளியேறி சிக்கபல்லாப்பூருக்கு வந்து விட்டேன். இங்கு நான் வந்த போது எனக்கு, 22 வயது. தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. ஆரம்பத்தில் சில நாட்கள் கடினமாக இருந்தாலும், கன்னடம் பேச கற்றுக் கொண்ட பின் இங்கு வசிப்பது எளிதானது.
திருநங்கையருக்கான சங்கத்தை சிலரின் உதவியுடன் தொடங்கி, இச்சமுகத்தால் புறக்கணிக்கப்படும் திருநங்கையருக்கு வாழ்க்கையில் முன்னேற தேவையான அனைத்து வசதிகளையும், அரசின் மூலம் பெற்றுக் கொடுத்தோம். ஏழை, எளிய மக்களுக்கு அரசிடம் இருந்து தங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி தெரிவதில்லை. ஆதரவற்றோரின் குரலாக நாங்கள் உள்ளோம்.
கொரோனா நேரத்தில் திருநங்கையர், ஆட்டோ டிரைவர்களுக்கு உதவி கேட்டு சமூக வலைதளங்கள் மூலம் நிறைய வீடியோக்களை வெளியிட்டேன். 10 லட்சம் ரூபாய் நிதி உதவி கிடைத்தது. ஆயிரக்கணக்கானோருக்கு ரேஷன் தொகுப்புகள், அத்தியாவசிய பொருட்களை வினி யோகித்தோம்.
இது, என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். எனது சேவையை பாராட்டி கர்நாடக ராஜ்யோத்சவ விருதை, சிக்கபல்லாபூர் மாவட்ட நிர்வாகம் வழங்கியது. என்னால் முடிந்தவரை ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-- நமது நிருபர் --

