பெட்ரோலில் ஓடும் வாகனத்தை பேட்டரியில் மாற்றிய மாணவர்!
பெட்ரோலில் ஓடும் வாகனத்தை பேட்டரியில் மாற்றிய மாணவர்!
ADDED : ஜூன் 06, 2026 11:28 PM

- நமது நிருபர் -:
சாதிக்க நினைப்பவர்களுக்கு வயது தடையல்ல என்பதை, காபி நாடு என்று அழைக்கப்படும் சிக்கமகளூரு மாணவர் செய்து காண்பித்துள்ளார்.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்தியில், தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை வாங்க மக்களும் முன்வந்துள்ளனர்.
இந்நிலையில், சிக்கமகளூரு தாலுகாவின் குருவங்கி கிராமத்தை சேர்ந்தவர் சுனில்; ஐ.டி.ஐ.,யில் படிக்கிறார். சிறு வயதில் இருந்தே ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்த அவர், தன், 'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., 100' வாகனத்தையே, பேட்டரி வாகனமாக மாற்றி சாதித்து உள்ளார்.
தன் சாதனை குறித்து, சுனில் கூறியதாவது:
சிக்கமகளூரில் உள்ள ஐ.டி.ஐ., கல்லுாரியில் படிக்கிறேன். தமிழகத்தை சேர்ந்தவர்கள், யூ டியூபில் இது போல பேட்டரியில் இயங்கும் காரை உருவாக்குவதை பார்த்தேன். அவர்களால் செய்ய முடிந்த போது, நம்மால் ஏன் செய்ய முடியாது என்று எனக்கு தோன்றியது.
இதுபோன்று நாமும் இரு சக்கர வாகனத்தை உருவாக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவாக இருந்தது. ஐ.டி.ஐ.,யில் சேர்ந்த பின், என் கனவு நனவானது. இது குறித்து என் ஆசிரியர்களிடம் தெரிவித்தேன். அவர்களும், எனக்கு உதவினர். மூன்று மாதங்கள் உழைத்து, இந்த வாகனத்தை தயாரித்தேன்.
நான் பயன்படுத்தும் டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., 100 வாகனம், பெட்ரோலில் இயங்குகிறது. தற்போது இதை பேட்டரியில் இயங்கும் வாகனமாக மாற்றி உள்ளேன். இதை மாற்ற, பேட்டரி மோட்டரும், கண்ட்ரோலரும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கு, தேவையான பொருட்களை சேகரிக்க, ஒரு மாதமானது. டி.வி.எஸ்., எக்ஸ்.எல்.,ன் அனைத்து இன்ஜின்களையும், மற்ற பாகங்களையும் சுழற்றி, மீண்டும் பொருத்துவதற்கு எனக்கு நீண்ட நேரமானது.
காற்று மாசுபாட்டை தடுக்க உருவாக்கப்பட்ட இந்த வாகனம் உருவாக்க, 45,000 ரூபாய் செலவானது. சில பொருட்களை டில்லியில் இருந்து வரவழைத்தேன்.
மாற்றியமைக்கப்பட்ட இந்த வாகனத்தில், நான்கு மணி நேரம் சார்ஜ் போட்டால், 45 கி.மீ., பயணிக்கலாம்.
இத்தகைய வாகனம் தயாரிக்கப்படுவதை பார்த்தவர்கள், அதை பற்றி கேட்கும் போது, என்னுடைய கடின உழைப்புக்கு அர்த்தம் கிடைத்து உள்ளது. தினமும் இந்த வாகனத்தில் தான் கல்லுாரிக்கும் மற்ற பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
