பயணியருக்கு பயனளிக்கும் பல்லாரி பஸ் நிலைய நுாலகம்
பயணியருக்கு பயனளிக்கும் பல்லாரி பஸ் நிலைய நுாலகம்
ADDED : ஜூன் 20, 2026 10:50 PM

- நமது நிருபர் -:
பஸ் நிலையம் என்றால், தின்பண்ட கடைகள், டீ கடைகள், பேக்கரிகள் என பிற கடைகள் இருக்கும். ஆனால், பல்லாரி மத்திய பஸ் நிலையத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மட்டுமின்றி, பஸ்சுக்காக காத்திருப்போருக்கும் அவசியமானதாக, நுாலகம் அமைந்து உள்ளது.
மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக, பொது நுாலக துறை சார்பில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பரபரப்பான பல்லாரி மத்திய பஸ் நிலையத்தில், 2012ல், நகர மத்திய நுாலகம் அமைக்கப்பட்டு உள்ளது.
பஸ்சுக்காக காத்திருக்கும் நேரத்தில், பெரும்பாலானவர்கள் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். அதற்கு பதிலாக, இங்கு புத்தகங்களை படித்து பயனுள்ளதாக மாற்றலாம்.
இந்த நுாலகத்தில் இலக்கியம், வரலாறு, அறிவியல், வேளாண்மை, சுகாதாரம், சிறுவர் கதைகள், நாவல்கள் என பல தலைப்புகளில் புத்தங்கள் உள்ளன.
இங்கு கன்னடம், ஆங்கில செய்தித்தாள்களும், பல இதழ்களும் உள்ளன. இதை பலரும் ஆர்வத்துடன் படிக்கின்றனர்.
இந்த முயற்சி, மாணவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. தினமும் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் போதும், மீண்டும் வீட்டுக்கு திரும்பும்போதும், மாணவ - மாணவியர், இங்கு வந்து படிக்கின்றனர்.
போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இந்த நுாலகம், உண்மையான திருப்புமுனையாக அமைந்துள்ளது.
சில மாணவர்கள், தங்கள் பஸ் வரும் வரை, இங்கு அமர்ந்து படிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதாக நினைத்த இந்த காலகட்டத்தில், இதுபோன்று பொது இடத்தில் நுாலகம் திறப்பது சிறந்த யுக்தியாகும்.
மொபைல் போன், சமூக ஊடகங்களில் நேரத்தை வீணடிப்பதை விடுத்து, புத்தகங்களின் முக்கியத்துவத்தை காட்ட இது சிறந்த வழியாகும்.
நகர மத்திய நுாலக தலைமை நுாலகர் நரசண்ணா கூறியதாவது:
பொதுமக்கள் இந்த முயற்சியை விரும்பினாலும், அதிக புத்தகங்கள், இருக்கைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
தற்போதைய நுாலகத்தில் இடப்பற்றாக்குறை உள்ளது. நுாலகத்தை பெரிதாக்கினால் அனைவருக்கும் வசதியாக இருக்கும்.
கடந்த, 2012ல் துவங்கப்பட்ட இந்த நுாலகத்திற்கு தினமும், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், பஸ் பயணியர் வந்து படிக்கின்றனர். பல்லாரி நகரில் மட்டும், 10 கிளை நுாலகங்கள் உள்ளன. அனைத்து இடங்களிலும் இதுபோன்று வரவேற்பு சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
