பெங்களூரில் இன்று முதல் 14 வரை மாநில அளவிலான கபடி போட்டிகள்
பெங்களூரில் இன்று முதல் 14 வரை மாநில அளவிலான கபடி போட்டிகள்
ADDED : டிச 12, 2025 06:37 AM

: பெங்களூரு 'யங்ஸ்டர்ஸ் கபடி கிளப்' சார்பில் இன்று முதல் 14ம் தேதி வரை மாநில அளவிலான கபடி போட்டி நடக்கிறது.
இது தொடர்பாக, 'யங்ஸ்டர்ஸ்' கபடி கிளப் தலைவர் சிவராம் கூறியதாவது:
யங்ஸ்டர்ஸ் சார்பில் இன்று முதல் 14ம் தேதி வரை மாநில அளவிலான கபடி போட்டிகள் நடக்கின்றன. இதில், மாநிலம் முழுதும் 36 அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு கோதண்டராமபுராவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிக்காக குங்குமப்பூ, மஞ்சள், கற்பூரம், சந்தனம் ஆகிய கலவையை பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி மைதானம் தயாராகி உள்ளது.
உள்ளூர் விளையாட்டான கபடியில், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் எங்கள் கிளப் உழைத்து வருகிறது. 1965ல் நிறுவப்பட்ட இந்த கிளப், இதுவரை 500க்கும் மேற்பட்ட கபடி வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. 80க்கும் மேற்பட்ட வீரர்கள் தேசிய, மாநிலம், பல்கலைக்கழக அணிகளில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த கிளப்பை சேர்ந்த குப்புராஜ், சின்னசாமி ரெட்டி ஆகியோர் 1982ல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்றனர். அப்போது இந்திய அணி, தங்கப்பதக்கம் வென்றது. 60 ஆண்டுகால வரலாறுள்ள இந்த கிளப், 25 முறை மாநில அளவில், நான்கு முறை இந்திய அளவில், கைப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகளை நடத்தி உள்ளது.
இன்று மாலை 6:00 மணிக்கு வாக்குறுதி அமலாக்க குழு தலைவர் ரேவண்ணா, ஹிந்து அறநிலைய துறை உறுப்பினர் நாகராஜ் உட்பட பலர் விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கின்றனர். டிச., 14ல் நடக்கும் நிறைவு நாளில், எம்.எல்.சி., ஹரிபிரசாத், கபடி பயிற்சியாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.

