தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/ஆடுகளம்/ கடின உழைப்பு... விடாமுயற்சி... பெற்றோர் ஒத்துழைப்பு விஸ்வரூப வெற்றிக்கான மந்திரங்கள்

 கடின உழைப்பு... விடாமுயற்சி... பெற்றோர் ஒத்துழைப்பு விஸ்வரூப வெற்றிக்கான மந்திரங்கள்

 கடின உழைப்பு... விடாமுயற்சி... பெற்றோர் ஒத்துழைப்பு விஸ்வரூப வெற்றிக்கான மந்திரங்கள்


ADDED : பிப் 27, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

கர்நாடகா ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவர், காங்கிரஸ் எம்.எல்.சி., முதல்வரின் அரசியல் ஆலோசகர், இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவர், முன்னாள் கூடைப்பந்து விளையாட்டு வீரர் என பல பதவி, பொறுப்புகளை வகித்து வரும் அரசியல் ஆளுமையான, விளையாட்டு துறை மேம்பாட்டுக்காக போராடி கொண்டிருக்கும் கோவிந்தராஜ், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல். அசர வைக்கும் கேள்விகளுக்கு, அசாத்திய பதில்கள்.

கர்நாடகாவில் விளையாட்டு துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த உங்கள் பார்வை?

கர்நாடகா மாநில அரசு, விளையாட்டு துறை, கர்நாடகா ஒலிம்பிக் அசோசியேஷன் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆண்டு தோறும் சீனியர் மாநில போட்டி, மினி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இது, இளம் விளையாட்டு வீரர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. வளர்ச்சியை நோக்கி விளையாட்டு துறை வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

பெரிய அளவில் சாதனை எப்போது?

இது, அரசின் கைகளில் மட்டும் இல்லை. அனைத்து விளையாட்டு வீரர்களின் கைகளில் உள்ளது. இது, ஒரு நீண்ட பயணமாகும். குறுகிய காலத்தில் எதையும் எதிர்பார்க்க முடியாது. 365 நாட்களும் சமரசமில்லாமல் மனம், உடல் இரண்டையும் ஒரு நிலைப்படுத்தி பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியம்.

பெரிய அளவில் சாதித்தால் என்ன பயன்?

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 6 கோடி ரூபாய் பரிசு என, காங்கிரஸ் அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றாலும் அனைத்து அரசு பணிகளிலும், 2 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதெல்லாம், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியான திட்டமாகும்.

கிராமப்புறத்தவருக்கான பயிற்சி?

கிராமப்புறங்களில் இருக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், மாநில மினி விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அனைத்து ஊர்களில் இருந்தும் வீரர், வீராங்கனையர் பங்கேற்கின்றனர். இவ்வகையான போட்டிகள் கிராமப்புறங்களில் வசிப்பவர்களிடம் ஒளிந்து கிடக்கும் திறமையை அடையாளம் காண உதவியாக இருக்கிறது.

விளையாட்டு மைதான மேம்பாடு திட்டம்?

ஏற்கனவே பல சிறிய நகரங்களிலும் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானங்கள் உள்ளன. மேலும், சில இடங்களில் புதிதாக கட்டப்படும். மைதானங்கள் அமைப்பது பெரிய விஷயமல்ல. அவற்றை பராமரிப்பதே பெரிய விஷயம். அதில், நிறைய சவால்கள் உள்ளன.

வீரர்கள் உடல்நலனுக்கான உதவி?

ஒவ்வொரு மாவட்டத்திலும், 'ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல்' உள்ளது. அங்குள்ள வீரர்களுக்கு இலவச உணவு முதற்கொண்டு அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன. ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் பல வசதிகள் வழங்கப்படுவதில் வீராங்கனையருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு?

விளையாட்டு துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது. சில தனியார் நிறுவனங்கள் நிதியுதவி செய்து வருகின்றன. இருப்பினும், பல நிறுவனங்களும் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும்.

கிரிக்கெட், சக விளையாட்டுகளை அழித்து வருவதே பிரச்னையாக இருக்கிறது. சர்வதேச அளவிலான போட்டிகளை கர்நாடகாவில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இது குறித்த, அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

விளையாட்டு துறைக்கு சவால் என்ன?

நம் மாநிலத்தில் மாணவர்கள், 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் காலகட்டத்திலேயே விளையாட்டு பயிற்சிகளில் சேருகின்றனர். ஜப்பான் போன்ற நாடுகளில் மாணவர்கள் 1ம் வகுப்பு முதலே விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த கலாசாரம் மாற வேண்டும். மாணவர்கள் சிறுவயதிலேயே பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதற்கு பெற்றோர் ஒத்துழைப்பு தர வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டுக்கு அதீத முக்கியத்துவம் கிடைப்பதில்லை.

உங்கள் அறிவுரை?

கடின உழைப்பு; விடாமுயற்சி; பெற்றோர் ஒத்துழைப்பு போன்றவற்றால் நிச்சயம் விஸ்வரூப வெற்றி கிடைக்கும். விளையாட்டு துறையில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் எந்த தீய பழக்கங்களும் இல்லாதவர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us