ADDED : ஏப் 10, 2026 04:09 AM
- நமது நிருபர் -
நகர்ப்புறங்களில் வசிக்கும் சிறார்கள், விளையாட்டுகளில் சிறந்து விளங்குவர் என, பலரும் நினைக்கின்றனர். ஆனால், கிராமங்களிலும் விளையாட்டு திறன் கொண்டவர்கள், அதிகம் உள்ளனர். இவர்களுக்குள் மறைந்துள்ள திறமையை அடையாளம் கண்டு, போதிய பயிற்சி அளித்து சாதனை செய்ய வைப்பது, அரசின் பொறுப்பாகும். ஆனால், இந்த பொறுப்பை அரசு சரியாக செய்யவில்லை.
கிராமங்களில் உள்ள சிறார்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் பலருக்கும் விளையாட்டு திறன் உள்ளது. ஆனால், பயிற்சி பெற சரியான விளையாட்டு அரங்கமோ, பயிற்சியாளர்களோ இல்லாத காரணத்தால், இவர்களின் விளையாட்டு திறன், குடத்தில் இட்ட விளக்காய் உள்ளது.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதாக, அரசு கூறுகிறதே தவிர, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. பல்வேறு கிராமங்களில் விளையாட்டு அரங்கமே இல்லை. பெலகாவி மாவட்டம், அதானி தாலுகாவின், தாம்வஷி கிராமத்தின் அரசு உயர் நிலை பள்ளியில் உள்ள விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்தும்படி, விளையாட்டு வீரர்கள் மற்றும் கிராமத்தினர் வலியுறுத்தினர்.
இதன்படி 2021ல் அங்கு, 10 லட்சம் ரூபாய் செலவில், விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு, அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனாலும், அதன்பின் பணிகள் நடக்கவில்லை. ஐந்து ஆண்டுகள் கடந்தும், பணிகள் முடியவில்லை என, கிராமத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த மைதானத்தில் தாலுகா அளவில், கிரிக்கெட், டென்னிஸ், கபடி, கோகோ, கால்பந்து உட்பட, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.
இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் அதிருப்தி அடைந் துள்ளனர்.
விளையாட்டு அரங்கத்தின் சுற்றுப்பகுதி தடுப்புச்சுவரும், மோசமான நிலை யில் உள்ளது; இதை சரி செய்யவில்லை.
விரைவில் அரங்கத்தை மேம்படுத்தும் பணிகளை முடித்து, பயிற்சி பெற வசதி செய்யும்படி, விளையாட்டு வீரர்கள், கிராம பஞ்சாயத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
