ADDED : ஜூன் 07, 2026 11:24 PM

- நமது நிருபர் -
யோகா, இந்தியாவின் பாரம்பரியமான கலையாகும். ஆன்மிகத்துடன் தொடர்புடைய இந்த கலையில் பலரும் சிறந்து விளங்குகின்றனர். ஆரோக்கியத்தில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. நோய்கள் அண்டாமல் தடுக்கிறது. சிறியவர்கள் முதல், மூத்த குடிமக்கள் வரை, பலரும் தினமும் காலை யோகா பயிற்சி பெறுவதை, பயிற்சி செய்வதை காணலாம்.
நரேந்திர மோடி பிரதமரான பின், ஆண்டுதோறும் ஜூன், 21ம் தேதியன்று யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
இம்முறையும் யோகா தினத்தை கொண்டாட, ஏற்பாடு நடக்கிறது. இதில் பங்கேற்க பலரும், இப்போதிருந்தே தயாராகின்றனர். இதில் சசிபிரபா திரிவேதியும் ஒருவராவார்.
சமூக வலைதளங்கள் பெங்களூரின், வர்துார் சாலையில் யோகா ஸ்டூடியோ நடத்துகிறார். அங்கு ஆரோக்கிய வாழ்வுக்காக யோகா கற்றுத்தரும் ஆசிரியையாக பணியாற்றுகிறார். யோகா குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியான அவர், கடினமான யோகாசனங்களை அற்புதமாக செய்து அசத்துகிறார்.
இவர், சேலை உடுத்தி, யோகாசனம் செய்யும் வீடியோக்களை, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து, அனைவரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.
சாதாரணமாக இருப்பவர்களே, கடினமான யோகாசனங்களை செய்வது கஷ்டம். ஆண்டுக்கணக்கில் பயிற்சி பெற வேண்டி வரும்.
ஆனால் ஒன்பது மாத கர்ப்பிணியான சசிபிரபா திரிவேதி, உடலை வில்லாக வளைத்து யோகா செய்வது, மெய்சிலிர்க்க வைக்கிறது. பெண்களால் எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
ஆதரவும், எதிர்ப்பும் வீடியோவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் வெளியாகியுள்ளன. ஒருவர், 'பிரசவ நாள் நெருங்கும் நிலையில், இத்தகைய அபாயமான பயிற்சி செய்வது சரியல்ல. வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதுகாப்பானதா. உங்களின் குழந்தையை பற்றி யோசியுங்கள்' என கூறியுள்ளார்.
கர்ப்பிணி ஒருவர், 'உங்கள் திறமையை நான் மதிக்கிறேன். ஆனால் அழகான கர்ப்ப தோற்றத்தை, மற்றவரிடம் காட்டுவதில் எனக்கு விருப்பம் இல்லை. ஒரு கர்ப்பிணியாக இதை நான் கண்டிக்கிறேன்.
இத்தகைய கடினமான யோகாசனங்கள் செய்தவர்கள், பிரசவ நேரத்தில் கஷ்டப்பட நேரிடும். உடல் ஆரோக்கியம் முக்கியம் தான். ஆனால், அது குழந்தையை விட முக்கியமானது அல்ல. எந்த தாயும் தன் குழந்தையை இப்படிப்பட்ட அபாயத்தில் தள்ளமாட்டார்' என, கூறியுள்ளார்.
அதேநேரம், இவரது முயற்சியை பலரும் பாராட்டியுள்ளனர். 'சரியான வழிகாட்டுதல் இருந்தால், கர்ப்ப காலத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். நிறைமாத கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதும், பளு துாக்குவதும் நல்லதே' என கூறியுள்ளனர்.
