குழந்தைக்கு தாய்ப்பால் போதாவிட்டால் என்ன செய்வது?
குழந்தை பிறந்தவுடன் சீம்பால் சொட்டு சொட்டாகத் தான் வரும். இந்த அளவு பால் குழந்தைக்கு போதாது என்று தாய் நினைக்கலாம்.
குழந்தை மார்பில் உறிஞ்சும் போது பால் தானாக சுரக்கும். இது தான் இயற்கை.
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், உடற்பருமன் உள்ளவர்கள், தாமத வயதில் குழந்தை பெற்றவர்களுக்கு சில நேரங்களில் தாய்ப்பால் சுரப்பதில் பற்றாக்குறை ஏற்படலாம்.
ஆப்ரேஷன் மூலம் குழந்தை பெற்றவர்கள் திட உணவு சாப்பிட ஆரம்பித்த பின் பால் நன்றாக சுரக்க ஆரம்பிக்கும்.
சுகப்பிரசவமோ, அறுவை சிகிச்சையோ குழந்தை வெளியே வந்தவுடனேயே தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
எவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பிக்கிறீர்களோ அந்தளவுக்கு இயல்பாக பால் சுரக்கும். அரிதாக பால் சுரப்புக்கென ஒரு சிலருக்கு மருந்துகள் தர வேண்டியிருக்கும்.
குழந்தை மீண்டும் மீண்டும் அழுவதால் பால் போதவில்லை என நினைத்து ஒரு சிலருக்கு மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்படும்.
குழந்தை பாலுக்காக மட்டும் அழுவதில்லை. அழுவது ஒன்றே குழந்தைக்கு தெரிந்த மொழி.
சிறுநீர், மலம் கழித்திருக்கலாம், குழந்தை படுத்துள்ள, கையில் வைத்துள்ள நிலை அசவுகரியத்தை தரலாம். உடல் சூடு, குளிர்ச்சியாக இருக்கலாம். காரணத்தை நாம் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.