துவரம் பருப்பு, முட்டை, பால்... எது அலர்ஜியை ஏற்படுத்தும்?
இன்று எல்லாப் பருவத்திலும் சைனஸ் பாதிப்புள்ளது. குறிப்பாக நகரங்களில் அதிகம். காரணம், எங்கு பார்த்தாலும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன; வாகனப் புழுதியும் அதிகம்.
ஆனால் எல்லா சைனசும் தொற்று கிடையாது. ஒவ்வாமை பிரச்னையால் தான் பெரும்பாலும் சைனஸ் ஆரம்பித்து, தொடர்ந்து நீடிக்கும்.
இதற்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் எந்த விதத்திலும் பலன் தராது. அலர்ஜியால் எற்பட்ட சைனஸ் பிரச்னைக்கு அதை துாண்டிய காரணி எது என்பதை கண்டறிந்து, அதை தவிர்க்க வேண்டும்.
உதாரணமாக துாசி, புழுதி தான் பிரச்னைக்கு காரணம் என்றால், துாசி இருக்கும் இடங்களுக்கு செல்வதற்கு முன் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
படுக்கை விரிப்பு, திரை சீலைகள் உட்பட அனைத்தையும் வழக்கத்தை விடவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
நம் நாட்டில், எட்டில் ஒருவர் சைனசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு 40 % மாசு, புழுதி தான் காரணம்.
ஆஸ்துமாவிற்கு என தனியாக சிகிச்சை இல்லை. அலர்ஜிக்கு தான் சிகிச்சை செய்ய முடியும்.
ரத்தப் பரிசோதனையில், இம்யூனோகுளோபுலின் என்ற வேதிப்பொருள், அதிகமாக இருந்தால், ஏதோ ஒரு வெளிப்புற காரணியின் துாண்டுதல் உள்ளதாக புரிந்து கொள்ளலாம்.
இப்பரிசோதனையில், மூக்கு, வாய் வழியாக நுழையும் காற்று, உணவுப் பொருட்களில், எது நமக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
துவரம் பருப்பு, பால் பொருட்கள், முட்டை என்று எது வேண்டுமானாலும் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.