ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த கதை!
ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுவது, 500 ஆண்டுகளாகத் தான். இதை மெசபடோமியர்கள் தான், முதன் முதலாகக் கொண்டாடினர்.
அவர்கள் மார்ச் 25ம் தேதியை, ஆண்டின் முதல்நாளாகக் கருதிய நிலையில், காலண்டரில், 10 மாதங்கள் தான் இருந்தன.
இது சரியாக இல்லை என, ரோமானிய மன்னர், நுமா பாம்பிளியஸ், 'சூரியனின் நகர்வைப் பொறுத்து, 12 மாதங்கள் தான் சரியாக இருக்கும்' என மார்ச் முதல் தேதியை புத்தாண்டு தினமாக்கினார்.
அத்துடன், ஜனவரி, பிப்ரவரி என்ற 2 மாதங்களை டிசம்பருக்கு அடுத்தபடியாக, அதாவது கடைசி 2 மாதங்களாக வரும்படி சேர்த்தார்.
அதன்பின், இப்போதைய ஜனவரி முதல் தேதியை, புத்தாண்டு தினமாக அறிவித்தவர் ரோமானிய மன்னர் ஜூலியஸ் சீசர் தான். இந்த மாற்றம், கி.மு., 46ல், நடைமுறைக்கு வந்தது.
ரோமானியர்களின் ஜானஸ் தெய்வத்துக்கு 2 முகங்கள். இவரை, 'காலக்கடவுள்' என்றனர். அதில் ஒரு முகம், நிகழ்காலத்தையும்; இன்னொரு முகம், எதிர்காலத்தையும் கணிப்பதாக நம்பினர்.
இதனால், ஜானஸ் என்ற இந்த தெய்வத்தின் பெயரால், ஜனவரி என்ற பெயர் சூட்டிய மாதத்தை, ஆண்டின் முதல் மாதம் ஆக்கினர்.
பிப்ரவரி மாதம், 'பெப்ரூவா' என்ற, மனதைத் துாய்மையாக்கும் விழாவின் பெயரால் உருவானது. மார்ச் மாதத்துக்கு, 'மார்ஸ்' என்ற போர்க்கடவுளின் பெயர் சூட்டப்பட்டது.
லத்தீன் மொழியில், 'ஏப்ரிலிஸ்' என்ற வசந்த கால பூக்கள் மலரும் காலத்தின் பெயரால், ஏப்ரல் மாதம் உருவானது.
கிரேக்க கடவுளான 'மேய்யா' மற்றும் ரோமானியக் கடவுள் 'மேய்ஸ்டா' என்ற கடவுளரின் பெயரால் மே மாதமும், 'ஜூனோ' என்ற பெண் தெய்வத்தின் பெயரால், ஜூன் மாதமும் பிறந்தன.
ஜூலியஸ் சீசர் பெயரால் ஜூலை மாதமும், முதல் ரோமானிய பேரரசர் அகஸ்டஸ் சீசரின் பெயரால் ஆகஸ்ட் மாதமும் வந்தது.
முன்னொரு காலத்தில் மார்ச் முதல் மாதமாக இருந்த போது, ஏழாம் மாதமாக இருந்ததன் அடிப்படையில், 'செப்டம்' என்ற லத்தின் எண்ணான ஏழின் பெயரால், செப்டம்பர் மாதம் வந்தது.
'ஆக்டோ' என்ற 8ம் எண்ணின் பெயரால் அக்டோபரும், 'நோவம்' என்ற 9ம் எண்ணின் பெயரால் நவம்பரும், 'டெசிம்' என்ற 10ம் எண்ணின் பெயரால் டிசம்பரும் பிறந்தன.