முட்டையில் புற்றுநோய்க்கான காரணிகள் ஏதுமில்லை - எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,

முட்டைகள் புற்றுநோய் ஆபத்தை விளைவிப்பதாக பரவி வரும் தகவல்கள் தவறானவை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் மனித நுகர்விற்கு முற்றிலும் பாதுகாப்பானவை என ஆணையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் முட்டைகளில், தடை செய்யப்பட்ட 'நைட்ரோபியூரான்' என்னும் 'ஆன்டிபயாடிக்' மருந்தின் தடயங்கள் இருப்பதாக சமூக ஊடகத்தில் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதை அடுத்து நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளதா என்பதை பரிசோதித்து அறிக்கை அனுப்ப,மண்டல அலுவலகங்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உத்தரவிட்டது.

தற்போது அந்த ஆய்வில் சாதாரண முட்டை நுகர்வுக்கும், புற்றுநோய் அபாயத்திற்கும் இடையே எந்த நேரடி தொடர்பும் இல்லை என சர்வதேச சுகாதார அமைப்புகளின் ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க உற்பத்தி செய்யப்பட்டு உட்கொள்ளப்படும் முட்டைகள் மிகவும் பாதுகாப்பானவை என கூறப்படுகிறது.

தேவையற்ற வதந்திகளை நம்பாமல், சரிபார்க்கப்பட்ட அறிவியல் சான்றுகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆலோசனைகளை பொதுமக்கள் நம்ப வேண்டும் என எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தெரிவிக்கப்பட்டுள்ளது.