மனநலனை பாதிக்கும் காற்று மாசு: உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை
டில்லியில் நிலவும் காற்று மாசு குறித்து 'எமோநீட்ஸ்' என்ற உளவியல் ஆலோசனை வழங்கும் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை குறித்து பார்ப்போம்.
தற்போது டில்லியில் நிலவும் காற்று மாசு பெரும்பாலும் நுரையீரலையே பாதிப்பதாக பலர் தெரிவித்துள்ளனர் .
ஆனால் மாசு அதிகம் உள்ள நாட்களில் பலர் எரிச்சல், அமைதியின்மை, மனச்சோர்வு, மன இறுக்கத்தை உணர்கின்றனர். உடல்நல பிரச்னைக்கு இணையாக மனநல பாதிப்பும் அச்சுறுத்தலாக உள்ளது.
காற்று மாசுக்கும் அறிவுத்திறன் குறைவது, நரம்பியல் கோளாறுக்கும் தொடர்பு உள்ளதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் குழந்தைகள், முதியோர், ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
கவனச்சிதறல் ஒருவர் காற்று மாசு சூழலில் நீண்டகாலமாக இருந்தால், அவருக்கு அல்சைமர் எனும் மறதி நோய், பார்கின்சன் எனும் நடுக்கம் போன்ற நரம்பியல் நோய்களுக்கு வழிவகுக்கும்.
மாசு நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் குறைவு, நினைவாற்றல் பிரச்னை, ஏ.டி.எச்.டி., எனப்படும் கவனச்சிதறல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
காற்று மாசு உடலில் கார்ட்டிசால் எனும் ரசாயன அளவை உயர்த்தி, மனநிலையை பாதிக்கும். தொடர்ந்து இது நிகழும் போது நாள்பட்ட மன அழுத்தம் ஏற்படும் என அறிக்கை கூறுகிறது.