ADDED : ஜூன் 08, 2024 01:23 PM

இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் ஆக மீண்டும் பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்பதற்கு பாகிஸ்தான் விளக்கம் அளித்து உள்ளது.
பிரதமர் ஆக பதவியேற்க உள்ள பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தான் இதுவரை வாழ்த்து சொல்லவில்லை.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நிருபர்களை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாக்ராவிடம், மோடிக்கு பாகிஸ்தான் சார்பில் வாழ்த்து சொல்லப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் அளித்த பதில்: தங்களது தலைவரை தேர்வு செய்யும் உரிமை இந்திய மக்களுக்கு உள்ளது. இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள் குறித்து எந்த கருத்தும் கூற முடியாது. புதிய அரசு பதவியேற்காததால் இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பது குறித்து பேசுவது முதிர்ச்சியற்றது.
இந்தியா உள்ளிட்ட அனைத்து நட்பு நாடுகளுடன் நட்பையே பாகிஸ்தான் விரும்புகிறது. காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

