UPDATED : செப் 09, 2025 10:49 PM
ADDED : செப் 09, 2025 10:41 PM

புதுடில்லி: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை மனதை வேதனைபடுத்துகிறது, என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்த கோபத்தில் நேபாள நாட்டு பார்லிமென்ட் வாயிலை எரித்து மாணவர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். தலைநகர் காத்மாண்டுவில் நடந்த இந்த கலவரத்தில், 20 பேர் உயிரிழந்தனர். மாணவர்கள் போராட்டம் எதிரொலியால் அந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள் தாக்கப்படுகின்றனர். முன்னாள் பிரதமரின் மனைவியை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து ஆட்சியை ராணுவம் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பஞ்சாப், ஹிமாச்சல் சென்று விட்டு திரும்பிய பிறகு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவை கூட்டி நேபாளத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். அங்கு ஏற்பட்டுள்ள வன்முறை மனதை வேதனைப்படுத்துகிறது. பல இளைஞர்கள் உயிரிழந்தது என் மனதை மிகவும் வருத்தப்படுத்துகிறது.
நேபாளத்தின் ஸ்திரத்தன்மை , அமைதி மற்றும் செழிப்பு ஆகியவை மிக முக்கியமானவை. நேபாளத்தில் உள்ள எனது அனைத்து சகோதர, சகோதரிகளும் அமைதியையும் ஒழுங்கையும் பராமரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.