ADDED : செப் 20, 2025 09:03 PM

மாஸ்கோ: ரஷ்யாவின் தென்மேற்கு சமாரா பகுதியில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2022ம் ஆண்டு முதல் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான போர் நடைபெற்று வருகிறது.உக்ரைன் மீது ரஷ்யா நேற்றிரவு முழுவதும் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் சிலர் பலத்த காயமுற்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உக்ரைன் முழுவதும் பல்வேறு இடங்களில் 600க்கு மேற்பட்ட டிரான்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. சமீபத்திய வாரங்களில் உக்ரைன் மீதான அதன் வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவின் தென்மேற்கு சமாரா பகுதியில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சமாரா கவர்னர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிரிகளின் டிரோன் தாக்குதலில் நான்கு பேர் பலியானதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உக்ரைன் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 149 டிரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தினோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா மீதான மிக மோசமான உக்ரைன் பதிலடி தாக்குதல்களில் இந்தத் தாக்குதல் ஒன்றாகும்.
ரஷ்ய டிரோன்கள் தங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக போலந்து மற்றும் ருமேனியா கூறியதைத் தொடர்ந்து, சமீப காலமாக பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.