ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதாக டிரம்ப் ஆருடம்
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதாக டிரம்ப் ஆருடம்
ADDED : ஆக 03, 2025 04:40 AM

வாஷிங்டன்: ''ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இனி வாங்காது என கேள்விப்பட்டேன், அது உண்மையா பொய்யா என்பது தெரியாது. ஆனால் இது ஒரு நல்ல முடிவு , ' ' என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜனவரியில் இரண்டாவது முறை பதவிக்கு வந்ததில் இருந்து சர்வதேச நாடுகளுடனான வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கினார்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பல நாடுகள், அதே அளவுக்கு இறக்குமதி செய்வதில்லை; அமெரிக்க பொருட்களுக்கு மிக அதிக வரி விதிக்கின்றன என குற்றஞ்சாட்டினார்.
கடந்த ஏப்ரலில் வர்த்தக பற்றாக்குறை உள்ள நாடுகள், அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி முறையை அறிமுகப்படுத்தினார்.
அதன் பின் பேச்சு நடத்துவதற்கு வசதியாக அந்த வரியை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நிறுத்தி வைத்தார். பேச்சு நடத்தி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்த நாடுகளுக்கு வரியை குறைத்து உத்தரவிட்டார்.
இந்தியா சார்பில் பேச்சு நடந்த போதும், அமெரிக்காவுடன் எந்த முக்கிய ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும், ராணுவ தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்வதையும் அமெரிக்கா எதிர்க்கிறது.
இது குறித்து அதிபர் டிரம்ப் சமீபத்தில் கூறுகையில், ''உலகிலேயே இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
' 'மேலும், உக்ரைனில் நடத்தி வரும் போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி வரும் வேளையில், இந்தியா சீனாவுடன் இணைந்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இது நல்லதல்ல ' ' என்றார்.
இது போன்ற காரணங்களால் இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கும் உத்தரவில் டிரம்ப் சமீபத்தில் கையெழுத்திட்டார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதற்காக அபராதமும் விதித்தார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், ' 'ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி கச்சா எண்ணெய் வாங்காது என தகவல் கிடைத்தது. அது உண்மையா, பொய்யா என்பது தெரியாது. ஆனால் நல்ல முடிவு. என்ன நடக்கிறது என்று பார்ப்போம ் '' என்று கூறினார்.
இது குறித்து நம் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ''விலையை அடிப்படையாக வைத்து சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து எண்ணெய் வாங்குகிறோம். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி தற்போது என்னிடம் தகவல் இல்ல ை '' என் றார்.