'டிரம்ப் கோல்டு கார்டு விசா' : புதிய திட்டம் அறிமுகம்
'டிரம்ப் கோல்டு கார்டு விசா' : புதிய திட்டம் அறிமுகம்
UPDATED : செப் 21, 2025 06:19 AM
ADDED : செப் 21, 2025 06:17 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக 'டிரம்ப் கோல்டு கார்டு' என்ற விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் பெருமளவு பணம் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அமெரிக்காவில் விரைவாக குடியேற்ற உரிமை பெற வழிவகை செய்கிறது.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
டிரம்ப் கோல்டு கார்டு என்பது, அமெரிக்க அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்கும் செல்வந்தர்களுக்கும், நிறுவனங்களுக்கும் நிரந்தரமாக அமெரிக்காவில் குடியிருக்கும் உரிமை வழங்குகிறது.
இதன் நோக்கம், நாட்டிற்கு வருவாயை ஈட்டுவதும், தற்போதுள்ள இபி1 மற்றும் இபி2 விசாக்களுக்கு பதிலாக ஒரு புதிய வழியை உருவாக்குவதாகும்.
இந்த கோல்டு கார்டு விண்ணப்பங்களுக்கான அதிகாரப்பூர்வ வலைதளம் ஏற்கனவே செயல்பாட்டில்
உள்ளது. இத்திட்டம் மூன்று வகைகளை கொண்டுள்ளன.
1.தனிநபர் கோல்டு கார்டு
அமெரிக்க கருவூலத்துக்கு இந்திய மதிப்பில் 8.5 கோடி ரூபாய் பரிசாக வழங்க வேண்டும். மேலும், இதற்காக விண்ணப்பிப்போர் திரும்ப பெற முடியாத, பரிசோதனை மற்றும் செயலாக்க கட்டணமாக 15,000 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 13 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
2. நிறுவன கோல்டு கார்டு
ஒரு நிறுவனம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிதியுதவி செய்ய இது அனுமதிக்கிறது. ஒவ்வொரு பணியாளருக்கும் இந்திய மதிப்பில் 17 கோடி ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும். நிறுவனங்கள், குறிப்பிட்ட கட்டணங்களை செலுத்தி, ஒரு பணியாளரின் குடியுரிமையை மற்றொரு பணியாளருக்கு மாற்றிக் கொள்ளலாம்.
3. பிளாட்டினம் கார்டு
இது மிக உயர்ந்த அளவிலான விருப்பமாகும். இதற்காக விண்ணப்பிப்போர் 43 கோடி ரூபாயை அரசுக்கு செலுத்த வேண்டும். இக்கார்டை வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் 270 நாட்கள் வரை தங்கலாம்.
அமெரிக்காவுக்கு வெளியே ஈட்டும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. இத்திட்டத்துக்கு அமெரிக்க பார்லிமென்டின் ஒப்புதல் தேவை என்பதால், இது இன்னமும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இத்திட்டம் அமெரிக்காவுக்கு கணிசமான வருவாயை ஈட்டவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
இருப்பினும், இத்திட்டம் சட்ட சவால்களை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.