ADDED : செப் 10, 2025 04:28 PM

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் புதிய அரசு பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. இதுவரை 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு தலைமையிலான அரசு இரண்டு நாட்களுக்கு முன் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதையடுத்து பிரதமர் ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக ராணுவ அமைச்சர் லெகர்னுவை அதிபர் இமானுவேல் மேக்ரோன் நியமித்துள்ளார்.
இவ்வாறு புதிய புதிய பிரதமர் நியமனம் செய்வதற்கும், அரசின் செலவுகளை சிக்கனமாக செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆன்லைனில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவ்வாறு அறிவிக்கப்பட்ட போராட்டங்களில் பலர் நேரடியாக களம் இறங்கினர். நாட்டின் முக்கிய நகரங்களில் போக்குவரத்தை வழிமறிக்கும் வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டன.
மக்கள் கூட்டமாக கூடுவதை தடுத்த போலீசார், முன்னெச்சரிக்கை செய்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். நாட்டின் மேற்கு பகுதி நகரமான ரென்ஸ் நகரில் பஸ் ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வின் வினியோக தொடர் அமைப்பு சேதப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் புருனோ தெரிவித்துள்ளார்.
போராட்டத்துக்கு யாரும் தலைமை தாங்காமலேயே நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் பிரான்ஸ் நாட்டில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.