1971-ஐ நினைவில் கொள்ளுங்கள்: இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்க வங்கதேசத்திடம் ரஷ்ய தூதர் வலியுறுத்தல்
1971-ஐ நினைவில் கொள்ளுங்கள்: இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்க வங்கதேசத்திடம் ரஷ்ய தூதர் வலியுறுத்தல்
ADDED : டிச 23, 2025 02:44 PM

டாக்கா: ''1971ம் ஆண்டு சுதந்திரத்தின் போது இந்தியாவின் பங்களிப்பை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவுடனான பதட்டங்களைத் விரைவில் தணிக்க வேண்டும்'' என வங்கதேசத்திடம் ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் கோசின் வலியுறுத்தி உள்ளார்.
வங்கதேசத்தில், பார்லிமென்ட் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. மாணவர் அமைப்பின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மற்றொரு மூத்த தலைவர் துப்பாக்கியால் நேற்று சுடப்பட்டது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், பிப்ரவரி 12ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக, வங்கதேசத்தில் கலவரம், சிறுபான்மையினர் போராட்டங்கள் மற்றும் பதட்டங்கள் அதிகரிப்பதற்கு எதிராக வங்க தேசத்திற்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் கோசின் எச்சரிக்கை விடுத்தார்.
அவர் கூறியதாவது: அண்டை நாடுகளான இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கு இடையிலான நிலையான உறவுகள் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு வழி வகுக்கும். இந்தியாவுடனான பதட்டங்களைத் விரைவில் தணிக்க வேண்டும்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு நல்லது. ஏனென்றால், வரலாற்று ரீதியாக, 1971ல் வங்கதேசம் சுதந்திரம் பெற்றபோது, அது பெரும்பாலும் இந்தியாவின் உதவியால்தான் நிகழ்ந்தது. இந்த விஷயத்தில் ரஷ்யாவும் ஆதரவளித்தது.
இந்தியாவும், வங்கதேசம், ரஷ்யா ஆகிய நாடுகள் தோளோடு தோள் நின்று ஒன்றாகச் செயல்பட வேண்டும். வங்கதேசம், இந்தியா ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளில் ரஷ்யா தலையிடவில்லை. தற்போதைய நிலையில் இருந்து பதற்றம் மேலும் அதிகரிக்காத வகையில் ஒரு வழியைக் கண்டுபிடிப்பது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று ரஷ்யா கருதுகிறது. இவ்வாறு அலெக்சாண்டர் கிரிகோரிவிச் கோசின் கூறினார்.

