'நேட்டோ' போன்ற ராணுவ கூட்டமைப்பு: அரபு - முஸ்லிம் நாடுகள் கூட்டத்தில் முடிவு
'நேட்டோ' போன்ற ராணுவ கூட்டமைப்பு: அரபு - முஸ்லிம் நாடுகள் கூட்டத்தில் முடிவு
ADDED : செப் 16, 2025 10:06 PM

தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற அரபு - முஸ்லிம் நாடுகளின் அவசர உச்சி மாநாட்டில், 'நேட்டோ' போன்ற ராணுவ கூட்டமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர், இரண்டாண்டுகளை எட்டியுள்ளது. இந்நிலையில், மற்றொரு அண்டை நாடான கத்தாரில் பதுங்கியுள்ள ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, இஸ்ரேல் சமீபத்தில் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், அரபு லீக் எனப்படும் வளைகுடா நாடுகளின் அமைப்பு மற்றும் ஓ.ஐ.சி., எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த முஸ்லிம் நாடுகளின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கத்தாரின் கோரிக்கையை ஏற்று, இந்த அமைப்புகளைச் சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஓமன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப் பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசித்தனர்.
அப்போது, 'நேட்டோ' எனப்படும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அடங்கிய ராணுவ ஒத்துழைப்பு அமைப்பு போன்ற ஒரு ராணுவ கூட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தை எகிப்து முன்மொழிந்துள்ளது. அதன்படி, 22 அரபு லீக் நாடுகளும் சுழற்சி முறையில் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும். கத்தார் மீதான தாக்குதல், இனி வரும் நாட்களில் மேற்காசியாவில் கண்மூடித்தனமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியிருப்பதால் இப்போது மீண்டும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.