இரண்டு நாள் கலவரத்திற்கு பின் நேபாளத்தில் அமைதி திரும்பியது: இடைக்கால அரசின் தலைவராக சுசீலா தேர்வு
இரண்டு நாள் கலவரத்திற்கு பின் நேபாளத்தில் அமைதி திரும்பியது: இடைக்கால அரசின் தலைவராக சுசீலா தேர்வு
UPDATED : செப் 11, 2025 10:55 AM
ADDED : செப் 11, 2025 12:59 AM

காத்மாண்டு:நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதித்த தடைக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் இரண்டு நாட்களாக நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறிய நிலையில், ராணுவம் கட்டுப்பாட்டை ஏற்றதற்கு பின், நாட்டில் நேற்று அமைதி திரும்பியது.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இடைக்கால அரசின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கியை தேர்வு செய்துள்ளனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்த உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கியது.
வன்முறை அவ்விதிகளுக்கு இணங்காத 'வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யு டியூப், எக்ஸ்' உட்பட, 26 பிரபல சமூக ஊடகங்களை முடக்கி நேபாள அரசு சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது.
அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாக மாறியுள்ள சமூக ஊடகங்களை முடக்கியதால் இளைஞர்கள், மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கடந்த 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர்.
இதில், நேபாளின் 'ஜென் இசட்' எனப்படும், 1997க்கு பின் பிறந்த புதிய தலைமுறை இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.
முதல் நாள் போராட்டத்தின் போது அரசை கண்டித்து காத்மாண்டுவில் உள்ள பார்லிமென்டை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
இதே போல் பல்வேறு நகரங்களிலும் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் நடந்தது. ஒரு கட்டத்தில் இது வன்முறையாக வெடித்தது.
பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், முதல் நாளில் 19 பேர் பலியாகினர்.
இளைஞர்கள் போராட்டத்துக்கு பணிந்து சமூக ஊடகங்களுக்கு விதித்த தடையை அரசு நீக்கியது.
இருப்பினும் இறந்த இளைஞர்களுக்கு நீதி கேட்டும், அரசின் ஊழல் கள், வாரிசு அரசியல் போன்றவற்றுக்கு எதிராகவும் இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் பெரும் கலவரத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
பதவி விலகல் காத்மாண்டுவில் உள்ள பார்லிமென்ட், சிங்க தர்பார் எனும் தலைமை செயலகம், உச்ச நீதிமன்றம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களின் இல்லம் ஆகியவை சூறையாடப்பட்டன; தீ வைக்கப்பட்டன.
அமைச்சர்களை வன் முறையாளர்கள் சாலையில் ஓட ஓட விரட்டி அடித்தனர். சர்வதேச விமான நிலையத்தையும் கைப்பற்றினர். பிரச்னை கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றதால், பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் அமைச்சர்கள் பதவி விலகினர். இதையடுத்து ராணுவம் அரசு நிர்வாகத்தை கையில் எடுத்தது . இந்த இரண்டு நாள் வன்முறையில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,033 பேர் காயமடைந்ததாகவும் நேபாள சுகாதாரத் துறை தெரிவித்தது.
ஆட்சி நிர்வாகம் காலியானதை அடுத்து, நேபாளத்தை வழி நடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. காத்மாண்டு மேயர் பாலன் ஷா இடைக்கால அரசின் தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் பிரதிநிதிகள் நேற்று 'ஜூம்' செயலி மூலம் கூட்டம் நடத்தினர்.
இதில், யாரும் தங்கள் முகத்தை வெளிக்காட்டவில்லை. 'அவதார்' எனப்படும் அனிமேஷன் படங்கள் மற்றும் முகப்பு படங்கள் ஏதும் இல்லாத ஐடிக்களில் இருந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.
அவர்கள் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கியை இடைக்கால அரசின் தலைவராக தேர்வு செய்தனர். ஊழலுக்கு எதிரானவர் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக கூறினர். அவரும் பொறுப்புக்கு தயார் என கூறியுள்ளார்.
இளைஞர்களின் பிரதிநிதிகள், நேபாள ராணுவ தளபதி ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெலை சந்தித்து, சுஷிலா கார்கியின் தலைமையில் தற்காலிக அரசு அமைப்பது குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளனர்.
அவர் ஒப்புதல் வழங்கினால், சுஷிலா பொறுப்பேற்பார்.
இந்நிலையில், நாடு முழுதும் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததது. எவ்வித அசம்பாவித சம்பங்களுக்கும் இல்லாமல், நாடு முழுதும் நேற்று பொதுவாக அமைதியாக காணப்பட்டது.