பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு: ஐநாவில் வழக்கறிஞரிடம் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு: ஐநாவில் வழக்கறிஞரிடம் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்
ADDED : செப் 12, 2025 09:31 PM

ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாதம் தொடர்பான விவாதத்தில், வழக்கறிஞர் ஒருவர் பாகிஸ்தானை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என விமர்சித்து அந்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தினார்.
மேற்காசிய நாடான கத்தார் மீது சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் விவாதம் நடந்தது. அப்போது, மனித உரிமைகள் வழக்கறிஞரும், ஐநாவின் செயல்பாட்டை கண்காணிக்கும் அமைப்பான 'ஐநா வாட்ச்' என்ற நிறுவனத்தின் இயக்குநருமான ஹில்லெல் நியூயர் என்பவர், கடந்த 2012ல் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கும் கத்தாரை விமர்சித்தார்.
அவர் பேசும் போது, பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடாக கத்தார் உள்ளது. கடந்த 2011 ல் பாகிஸ்தானில் பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட போது, நீதி நிலை நாட்டப் பட்டது என ஐநா தலைவர் பாராட்டினார். ஆனால், தற்போது இஸ்ரேலை கண்டிக்கிறார் என பேசினார்.
அப்போது குறுக்கிட்ட பாகிஸ்தான் பிரதிநிதிகள், ' ஹில்லெல் நியூயர் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். எந்த உறுப்பினரும் ஐநாவின் விதிமுறைகளையும், இறையாண்மை மிக்க நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டு கொள்கைகளை மீறக்கூடாது' என்றனர்.
இதனையடுத்து ஹில்லெல் நியூயரை மீண்டும் பேச அனுமதித்த ஐநா தலைவர், பேச்சு முடிய 4 நொடிகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். அந்த நான்கு நொடியை பயன்படுத்திக் கொண்ட ஹில்லெல் நியூயர்,' தலைவர் அவர்களே, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மற்றொரு நாடு பாகிஸ்தான், ' என்று கூறி தனது பேச்சை முடித்தார். இதனையடுத்து செய்வது அறியாது திகைத்த பாகிஸ்தான் பிரதிநிதிகள் சங்கடத்தில் ஆழ்ந்தனர்.