இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்; அதிக வருமானம், வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும்; நியூசிலாந்து பிரதமர் மகிழ்ச்சி
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்; அதிக வருமானம், வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும்; நியூசிலாந்து பிரதமர் மகிழ்ச்சி
ADDED : டிச 27, 2025 10:37 AM

நமது நிருபர்
இந்தியா உடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், அதிக வேலைவாய்ப்புகள், வருமானத்தை உறுதி செய்யும் என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்தார்.
அண்மையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இந்தியாவும், நியூசிலாந்தும் அறிவித்தன. இரு நாட்டு பிரதமர்களும் தொலைபேசி வாயிலாக உரையாடி, இதை உறுதி செய்தனர். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியர்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுவதாகக்கூறி நியூசிலாந்தில் அரசியல் எதிர்க்குரல்கள் எழுந்தன.
இந்த ஒப்பந்தத்தால் இறக்குமதி வரிக்குறைப்பு, தொழிலாளர் விதிகளில் சீர்திருத்தங்கள், பணி விசா விரிவாக்கம், இந்திய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்க உள்ளன. நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், ' இந்திய மாணவர்களுக்கு சலுகைகள் அளிப்பதால் நியூசிலாந்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு நெருக்கடி ஏற்படும்' என எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த சூழலில், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது முதல் பதவிக்காலத்தில் இந்தியாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவோம் என்று நாங்கள் கூறினோம், அதை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம், 140 கோடி இந்திய நுகர்வோருக்கான கதவைத் திறப்பதன் மூலம், அதிக வேலைவாய்ப்புகள், அதிக வருமானம் மற்றும் அதிக ஏற்றுமதிகளை உறுதி செய்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

