'சிங்கப் பெண்கள்' ஜாஸ்மின், மீனாட்சி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்
'சிங்கப் பெண்கள்' ஜாஸ்மின், மீனாட்சி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம்
ADDED : செப் 15, 2025 04:54 AM

லிவர்பூல்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இந்தியாவின் ஜாஸ்மின், மீனாட்சி தங்கம் வென்றனர். நுபுர் வெள்ளி, பூஜா வெண்கலம் வென்றனர்.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
57 கிலோ பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா 21, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்தின் ஜூலியாவை எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார் ஜாஸ்மின். மூன்று சுற்று முடிவில், 5 நடுவர்களில் 4 பேர் ஜாஸ்மினுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கினர்.
முடிவில் ஜாஸ்மின் 4-1 என (30-27, 29-28, 30-27, 28-29-29-28) வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றி, உலக சாம்பியன் ஆனார்.
மீனாட்சி அபாரம் பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு பைனலில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற, மூன்று முறை உலக சாம்பியன் ஆன, கஜகஸ்தானின் நஜிம் கைஜய்பேவை எதிர்கொண்டார். இதில் மீனாட்சி, 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, புதிய சாம்பியன் ஆனார்.
நுபுர் 'வெள்ளி' பெண்களுக்கான 80+ கிலோ எடைப் பிரிவு பைனலில் இந்தியாவின் நுபுர் ஷியோரன், போலந்தில் அகட்டாவை சந்தித்தார். இதில் சமமான போட்டியை வெளிப்படுத்திய போதும், நுபுர் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
பூஜா 'வெண்கலம்' 80 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பூஜா, பாரிசின் எமிலி அஸ்குய்த்தை சந்தித்தார். இதில் பூஜா 1-4 என தோல்வியடைந்து, வெண்கலம் கைப்பற்றினார்.
இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கம் வென்றது.