கொரோனா செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு மீண்டும் சிறை
கொரோனா செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு மீண்டும் சிறை
ADDED : செப் 23, 2025 07:08 AM

பீஜிங்: சீனாவின் வூஹானில் ஆரம்பகால கொரோனா பரவல் குறித்து செய்தி வெளியிட்டதற்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சீன பெண் பத்திரிகையாளர் ஜாங் ஜானுக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் துவங்கியது. இது உலகெங்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
சீனாவின் வூஹானில் உள்ள மருத்துவ ஆய்வு கூடத்தில் இருந்து, கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. ஆனால், இதை சீனா மறுத்துள்ளது.
கடந்த, 2020ல் வூஹானுக்கு சென்று, கொரோனா பரவல் குறித்து, சீன பத்திரிகையாளரான ஜாங் ஜான், 42, செய்தி வெளியிட்டார். இது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, 2020 மே மாதம் அவர் கைது செய்யப்பட்டு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்தாண்டு, மே மாதம் விடுதலையானார். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பின் ஜாங் ஜான் கடந்தாண்டு ஆகஸ்டில் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஜான் மீதான குற்றச்சாட்டு குறித்து சமீபத்தில் ஷாங்காயில் விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தகவல் அளிக்க மறுத்துவிட்டனர்.
இருப்பினும், அவருக்கு மீண்டும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா., மற்றும் பல்வேறு மனித உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திர குழுக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அவரை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.