கணித 'பார்முலா' மூலம் அமெரிக்காவை எச்சரித்த ஈரான்
கணித 'பார்முலா' மூலம் அமெரிக்காவை எச்சரித்த ஈரான்
ADDED : ஏப் 14, 2026 05:04 AM

டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் வகையில், அங்கு கப்பல் போக்குவரத்துக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, ஈரான் ஒரு கணித 'பார்முலா' மூலம் வித்தியாசமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்த நாட்டு கப்பல்களின் போக்குவரத்துக்கு தடை விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். அந்த வழியாக செல்லும் கப்பல்களிடம் இருந்து ஈரான் கட்டணம் வசூலிப்பதை தடுக்க இந்த தடையை விதிப்பதாக அவர் கூறினார்.
இதற்கு பதிலடியாக, ஈரான் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், ஒரு வித்தியாசமான கணித பார்முலாவை பயன்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதள பதிவில், வெள்ளை மாளிகை அருகில் உள்ள பெட்ரோல் பங்க் விலைகளின் படத்தை பகிர்ந்துள்ளார். 'தற்போதைய பெட்ரோல் விலைகளை ரசித்து அனுபவியுங்கள். இந்த தடை வந்த பின், பழைய விலையை நீங்கள் ஏக்கத்துடன் நினைத்து பார்க்க நேரிடும்' என, குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன், ஹார்முஸ் ஜலசந்தியில் தடை ஏற்படுத்தப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை குறிப்பிடும், கணித பார்முலாவையும் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த பார்முலாவின்படி, முதல் கட்டத்தில் எண்ணெய் விலை உயரும், இரண்டாவது கட்டத்தில் சரக்கு போக்குவரத்து செலவு உயர்வு, உணவு பொருட்கள் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்றவை ஏற்படும். அமெரிக்காவில் தற் போதுள்ள பெட்ரோல் விலை, எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகி, மக்கள் இப்போதைய விலையை ஏக்கத்துடன் நினைக்கும் அளவுக்கு செல்லும் என்று, காலிபாப் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
இது ஒரு சாதாரண எச்சரிக்கை அல்ல. ஈரான் சபாநாயகர் பொறியியல் பின்னணி கொண்டவர் என்பதால், இப்படி ஒரு 'டெக்னிக்கல்' முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
