எச்1 பி விசா கட்டண உயர்வு எதிரொலி: பயணத்தை ரத்து செய்த இந்தியர்களால் விமானம் தாமதம்
எச்1 பி விசா கட்டண உயர்வு எதிரொலி: பயணத்தை ரத்து செய்த இந்தியர்களால் விமானம் தாமதம்
ADDED : செப் 22, 2025 06:12 PM

வாஷிங்டன்: எச்1 பி விசா கட்டணம் உயர்த்தப்பட்ட நாளில், சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் விமானத்தில் காத்திருந்த பயணிகள், டிரம்ப் உத்தரவிட்டதை அறிந்ததும் உடனடியாக பயத்தில் விமானத்தில் இருந்து கீழே இறங்கினர். பல பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதனால், விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர் அங்கு தங்கி வேலை செய்வதற்காக, எச்1பி விசா வழங்கப்படுகிறது. கடந்த 1990ம் ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான கட்டணம் முன்பு 1.5 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த விசாவுக்கான கட்டணத்தை, 88 லட்சம் ரூபாயாக பல மடங்கு அதிகரித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இது அமலுக்கு வந்தது. எச்1பி விசாவுக்கான கட்டண உயர்வு என்பது, அமெரிக்க பணியாளர்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டதுஎனவும், இந்த விசாவை முறைகேடாக பயன்படுத்தி, அமெரிக்க தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை தடுக்கவே இக்கட்டண உயர்வு எனவும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, மைக்ரோ சாப்ட் மற்றும் மெட்டா நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை அடுத்த 24 மணி நேரத்துக்குள் பணியில் சேரும்படி உத்தரவிட்டது. மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்ட வெள்ளிக்கிழமை ( செப்., 19) அன்று சான்பிரான்சிஸ்கோவில் இருந்து ஏராளமான இந்தியர்கள் சொந்த ஊருக்கும், வெளிநாடுக்கும் செல்ல எமீரேட்ஸ் விமானத்தில் காத்திருந்தனர். அப்போது டிரம்ப் உத்தரவு குறித்து மொபல் போன் மூலம் அறிந்தனர். உடனடியாக அவர்கள் மத்தியில் பயம் ஏற்பட்டது. தற்போது வெளிநாட்டை விட்டு வெளியேறினால், மீண்டும் வரும் போது கூடுதல் கட்ட வேண்டும். மீண்டும் அமெரிக்கா திரும்ப முடியாது என்ற அச்சம் அவர்கள் மத்தியில் எழுந்தது. சிலர் மொபைல் போன் மூலம் கூடுதல் தகவல்களை தேடியபடி இருந்தனர். குழப்ப நிலையில், தங்களுக்கு தெரிந்தவர்களிடம் தகவல்களை கேட்டபடி இருந்தனர்.
இதனையடுத்து விமானத்தின் விமானி அவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், ' தற்போது எழுந்துள்ள நிச்சயமற்ற சூழ்நிலையால், பல பயணிகள் பயணத்தை தொடர விரும்பவில்லை எனத் தெரிகிறது. அதில் பிரச்னை இல்லை. கீழே இறங்க விரும்பினால், உடமைகளுடன் இறங்கிச் செல்லலாம்'' என்றார்.
உடனடியாக பல பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறங்கிச் சென்றனர். இதன் காரணமாக அந்த விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இது குறித்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.