பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐநா தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவு
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐநா தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவு
ADDED : செப் 13, 2025 08:34 AM

நியூயார்க்: பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐநா தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10 நாடுகள் எதிராக ஓட்டளித்து உள்ளன.
கடந்த 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை 64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். போர் நிறுத்தம் குறித்து சர்வதேச அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்து உள்ளது. இந்த சூழலில், பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதியான தீர்வு காண வலியுறுத்தியும், பாலஸ்தீனமும் இஸ்ரேலும் இரு தனித்தனி நாடுகள் என்ற திட்டத்தை அமல் செய்ய வலியுறுத்தியும் ஐநாவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
நியூயார்க் பிரகடனத்திற்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்தது. மொத்தமாக இந்தியா உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்ததால், தீர்மானம் நிறைவேறியது.
அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜெண்டினா, பப்புவா நியூகினியா, பராகுவே, டோங்கா உள்ளிட்ட நாடுகள் இந்த பிரகடனத்துக்கு எதிராக ஓட்டளித்துள்ளன. அதேநேரத்தில் 12 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளன.
நியூயார்க்கில் வரும் செப்டம்பர் 22 ம் தேதி ஐ.நா. உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு சவுதி அரேபியா மற்றும் பிரான்ஸ் இணைந்து தலைமை தாங்குகின்றன. இந்த உச்சி மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாக உறுதி அளித்து இருக்கிறார்.
இதற்கிடையே, ''இனி ஒருபோதும் பாலஸ்தீனம் என்னும் நாடு அமையாது. இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.