'இல்லாத துப்பாக்கியால் போலீஸ் எப்படி சுட முடியும்'
'இல்லாத துப்பாக்கியால் போலீஸ் எப்படி சுட முடியும்'
ADDED : செப் 20, 2025 02:57 AM

காத்மாண்டு:நேபாளத்தில் சமூக வலைதள தடைக்கு எதிராக கடந்த 8, 9ல் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பிரதமர் இல்லம், அமைச்சர்களின் வீடுகள், உச்ச நீதிமன்றம், பார்லிமென்ட் வளாகம் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் கைப்பற்றி நொறுக்கினர்.
பிரதமராக இருந்த சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைநகர் காத்மாண்டுவை விட்டு தப்பினார். தற்போது ராணுவத்தின் பாதுகாப்பில் பக்தாபூர் மாவட்டத்தில் தனி வீடு ஒன்றில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று நேபாளத்தில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக முன்னாள் பிரதமர் சர்மா ஒலி வெளியிட்ட அறிக்கை:
நேபாள மக்கள் 70 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் அரசியலமைப்பை தேர்வு செய்த தினம் செப்டம்பர் 19. ஜனநாயக குடியரசு, கூட்டாட்சி அமைப்பு மற்றும் மக்களின் உரிமைகள் நிறுவப்பட்ட நாள் இது.
இந்த நேரத்தில் நம் அரசியலமைப்பின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்துள்ளது. பிரதமர் அலுவலகம், நேபாளத்தின் வரைபடம் எரிக்கப்பட்டது.
அமைதியாக நடந்து முடிந்திருக்க வேண்டிய இளைஞர்களின் போராட்டத்திற்குள் சதி கும்பலின் ஊடுருவல் இருந்தது. வன்முறையை தூண்டி இளைஞர்கள் உயிரிழப்புக்கு காரணமாகினர். தானியங்கி துப்பாக்கிளால் போலீஸ் சுட்டு இளைஞர்களை கொன்றதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் நேபாள போலீசிடம் தானியங்கி துப்பாக்கிகள் இல்லை. இது குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.