ஐநாவில் நிரந்தர இடம்: இந்தியாவிற்கு எலான் மஸ்க் ஆதரவு: அமெரிக்க நிலை என்ன?
ஐநாவில் நிரந்தர இடம்: இந்தியாவிற்கு எலான் மஸ்க் ஆதரவு: அமெரிக்க நிலை என்ன?
UPDATED : ஏப் 18, 2024 05:41 PM
ADDED : ஏப் 18, 2024 05:17 PM

வாஷிங்டன்: ஐ.நா.,வில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில், ஐ.நா., பாதுகாப்பு சபை உள்ளிட்ட ஐ.நா., அமைப்புகளை சீர்திருத்தம் செய்வதற்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா கூறியுள்ளது.
இந்தியா முயற்சி
15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா., பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. எஞ்சிய 10 இடங்கள், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் நிரப்பப்படுகிறது. ஐ.நா., பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடம் பெறுவதற்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது.
அபத்தம்
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛ ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அனைத்து தகுதிகளும் இந்தியாவிற்கு உள்ளது. இந்தியாவிற்கு பாதுகாப்பு கவுன்சிலில் இடம் அளிக்காதது அபத்தமானது. அதிகப்படியான அதிகாரம் உள்ளவர்கள் அதை விட்டுவிட விரும்பவில்லை'' எனக்கூறியிருந்தார்.
ஆதரவு
இந்நிலையில், எலான் மஸ்க்கின் கருத்து தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறியதாவது: ஐ.நா., பொதுச் சபை குறித்து அதிபர் ஜோ பைடன் பேசும் போது சீர்திருத்தம் பற்றிப் பேசி உள்ளார். நாம் வாழும் 21ம் நூற்றாண்டை பிரதிபலிக்கும் வகையில், ஐ.நா., பாதுகாப்புச் சபை உள்ளிட்ட ஐ.நா., அமைப்புகளை சீர்திருத்தம் செய்ய நாங்கள் நிச்சயம் ஆதரவு தெரிவிப்போம். அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தற்போது தெரிவிக்க முடியாது. ஆனால், நிச்சயம் சீர்திருத்தம் தேவை என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

