பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்திற்கு எதிரான முயற்சி தோல்வி; ஐநா சபையில் பாகிஸ்தானுக்கு அடி!
பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்திற்கு எதிரான முயற்சி தோல்வி; ஐநா சபையில் பாகிஸ்தானுக்கு அடி!
ADDED : செப் 19, 2025 04:36 PM

நியூயார்க்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் மஜீத் படைப்பிரிவை ஐநாவில் தடை செய்வதற்கான பாகிஸ்தானின் முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.
பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தானை தனி நாடாக பிரித்து தரக்கோரி பிஎல்ஏ எனப்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடுகிறது. பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது. தற்கொலை படை தாக்குதல் நடத்தி பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.
பிஎல்ஏவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள பாகிஸ்தான் ராணுவத்தால் அந்த அமைப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தைஇந்தியா தான் பின்னால் இருந்து இயக்குகிறது என்று கொஞ்சமும் ஆதாரமற்ற தகவலையும் பாகிஸ்தான் பரப்பி வருகிறது.
சமீபத்தில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் போருக்கு பிறகு பல வகையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவி வந்தது. அதன் ஒரு பகுதியாக பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்காவும் அறிவித்தது. இந்தியாவுடன் வர்த்தகப்போர் முற்றிய நேரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான இந்த முடிவை டிரம்ப் எடுத்து இருந்தார். இப்போது இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு மீண்டும் வலுப்பெற்று வருகிறது.
மேடைதோறும் மோடியையும் இந்தியாவையும் டிரம்ப் புகழ்ந்து வருகிறார். நிறுத்தப்பட்ட வர்த்தக பேச்சும் இப்போது துவங்கி இருக்கிறது. இப்படியொரு பரபரப்பான சூழலில் ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலில் சீனா தயவில் பாகிஸ்தான் ஒரு முக்கிய தீர்மானத்தை கொண்டு வந்தது.
ஏற்கனவே உள்ள ஐநா சட்டத்தின் படி பிஎல்ஏ மற்றும் பாகிஸ்தான் தலிபான் ஆகிய அமைப்புகளுக்கும் அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த தீர்மானம் மூலம் வலியுறுத்தியது.
அதாவது, ஐநா 1267 என்று ஒரு தீர்மானம் இருக்கிறது. இது 1996ல் கொண்டுவரப்பட்டது. தீர்மானம் படி தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்பவர்களும் பயங்கரவாதிகளாக கருதப்படுவார்கள்.
அவர்களின் பயணங்களை தடை செய்வது, பொருளாதாரத்தை தடை செய்வது என பல விதமான தடைகளை இந்த தீர்மானம் பரிந்துரைக்கிறது. இந்த தீர்மானத்தில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம், அதன் கிளை அமைப்பான மஜீத் தற்கொலை படையை சேர்க்கும்படி பாகிஸ்தான் வலியுறுத்தியது. ஆனால் ஐஎஸ் அமைப்புடன் பிஎல்ஏ அமைப்பை தொடர்புபடுத்த முடியாது. இதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் சேர்ந்து பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் சீனா, பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானத்தை தடுத்து விட்டன. இது ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானுக்கு விழுந்த பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. தீர்மானத்தை கொண்டு வரும் முன்பு ஐநாவுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி அகமது பேசினார்.
அப்போது, ஆப்கானிஸ்தானில் இருந்து தான் பெரிய அளவில் பயங்கரவாத அச்சுறுத்தலை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. பிஎல்ஏ, மஜித் பயங்கரவாதிகளை ஐநாவின் 1267 தீர்மானத்தில் சேர்த்தால் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க முடியும் என்று பேசினார்.ஆனாலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கவில்லை. இது அந்த நாட்டுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.