UPDATED : டிச 23, 2025 08:16 AM
ADDED : டிச 23, 2025 08:14 AM

பெர்லின்: மத்திய அரசு விசாரணை அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்துகிறது என ஜெர்மனியில் நடந்த நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது எல்லாம், இந்திய அரசை குற்றம்சாட்டும் வகையில் பேசுவது ராகுலுக்கு வழக்கம். தற்போது ஜெர்மனியின் பயணத்திலும் மத்திய அரசு மீது குற்றம்சாட்டி பேசி இருக்கிறார். ஜெர்மனியின் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: மத்திய அரசு விசாரணை அமைப்புகளை ஆயுதமாக பயன்படுத்துகிறது. அவர்கள் விசாரணை புலனாய்வு அமைப்புகளை கைப்பற்றுகின்றனர்.
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பாஜவினர் மீது எந்த வழக்குகளையும் பதிவு செய்வதில்லை. பாஜவிடம் உள்ள பணத்தையும், எதிர்க்கட்சியிடம் உள்ள பணத்தையும் பாருங்கள். ஜனநாயக அமைப்பின் மீது தாக்குதல் நடக்கிறது. இதை எதிர்ப்பதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
நாங்கள் பாஜவை எதிர்த்து போராடவில்லை. மாறாக இந்திய விசாரணை அமைப்புகளை அவர்கள் கைப்பற்றுவதை எதிர்த்து போராடுகிறோம். இண்டி கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிந்தாந்தத்துடன் உடன்படவில்லை. எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியிட்டன. அதேநேரத்தில் நாங்கள் பார்லிமென்டில் ஒன்றுபட்டுள்ளோம்.
சித்தாந்தம்
மத்திய அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொலைநோக்கு பார்வையை ஏராளமான மக்கள் ஆதரிக்கவில்லை. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மத்திய அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை விட முற்றிலும் மாறுபட்ட சிந்தனைகளை கொண்டுள்ளனர். இந்தியாவில் பலர் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர்.
அவரது சித்தாந்தத்துடனும், அவர் கொண்டுள்ள இந்தியாவைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையுடனும் பலர் உடன்படவில்லை. அந்த தொலைநோக்குப் பார்வை தோல்வியடையும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
மேலும் அதில் மிகப்பெரிய பிரச்னைகள் உள்ளன. இது இந்தியாவில் மிகப்பெரிய பதட்டங்களை உருவாக்கி, இந்திய மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட வைக்கும். நாங்கள் அதை எதிர்த்துப் போராடுவோம். இது இந்தியாவில் இரண்டு தொலைநோக்குப் பார்வைகளுக்கு இடையிலான மோதல். இவ்வாறு ராகுல் பேசினார்.

